தமிழ்நாடு

இடதுசாரி மாணவர்கள் குறிவைப்பா? சர்ச்சையான சுற்றறிக்கை.. சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்!

By Christon
20 Aug 2026, 12:07 PM
உயர்கல்வித்துறையின் சுற்றறிக்கை சர்ச்சையான நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுப்பது தொடர்பாகக் அரசு சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்துத் தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும், தவறுதலான வாசகங்கள் இடம்பெற்றதால் சுற்றறிக்கை உடனடியாக வாபஸ் பெறப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உயர்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல், குஜிலியம்பாறை வட்டாட்சியர் இடதுசாரி கட்சியினரின் விவரங்களை சேகரிக்க கோரி அனுப்பிய சுற்றறிக்கை சர்ச்சையானது.

இந்தச் சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மாரிமுத்து இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது, உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற சுற்றறிக்கை கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்துச் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், குஜிலியம்பாறை வட்டாட்சியர் சர்வே பணிக்காகவே அனுப்பப்பட்டார் என்று குறிப்பிட்டார். ஆனால், அவர் தேவையற்ற முறையில் கடிதங்களை எழுதி கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைக் கோரியது தெரியவந்ததையடுத்து, நேற்று அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், மாணவர்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்குக் கிடையாது எனத் தெளிவுபடுத்தினார். கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தவறாகச் சில வாசகங்கள் இடம்பெற்றுவிட்டதால், அது உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது என்றும், இதில் எந்தவித மறைமுக உள்நோக்கமும் இல்லை என்றும் கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.