தமிழ்நாடு

ஆங்கிலம் குறித்த சர்ச்சை பேச்சு.. அமித்ஷாவின் கருத்துக்கு விளக்கமளித்த எடப்பாடி

By MUTHUKRISHNAN
21 Jun 2025, 11:33 AM
'தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம்; தாய்மொழிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கருத்தில்தான்’ அமித்ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, தன்னைப்பற்றி திமுக ஐடி விங் வெளியிட்ட கேலிச்சித்திரம், அரசின் மீதான மக்கள் கொந்தளிப்பை திசை திருப்பும் முயற்சி என சாடினார்.

கீழடி அகழாய்வு குறித்து ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். "நேற்றைய தினமே, கழகத்தினுடைய தொழில்நுட்பச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பாண்டிராஜன் கீழடி அகழாய்வு குறித்து விளக்கமான மற்றும் தெளிவான பதிலை அளித்துள்ளார். அம்மா (ஜெயலலிதா) ஆட்சியில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதற்குப் பிறகு அம்மாவின் அரசு கீழடி அகழாய்வு குறித்து எப்படி ஈடுபட்டது என்பது குறித்த முழு விளக்கத்தையும் நேற்றே தெரிவித்துவிட்டோம்," என்று அவர் கூறினார்.

முருக பக்தர்கள் மாநாடு- ஐனநாயக உரிமை:

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். "ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விருப்பப்படும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்பும் கடவுளை, மாநாட்டின் மூலமாக ஆன்மிக அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரையில் முருக பக்தர் மாநாட்டை நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்," என்றார்.

ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என அமித் ஷா கூறியது குறித்த கேள்விக்கு, "அமித் ஷா அவருடைய கருத்தைக் கூறுகிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. அதைத்தான் அவர் கூறியிருக்கிறார். தாய்மொழி என்பது முக்கியம் என்று அவர் கூறி இருக்கிறார். அதேபோல, தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம்; தாய்மொழிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கருத்தில்தான் அவர் அதைக் கூறியிருக்கிறார்," என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.

திமுக அரசின் மீதான கொந்தளிப்பு:

திமுகவை சேர்ந்தவர்கள் கேலிச்சித்திரம் வெளியிட்டது குறித்து கேட்டபோது, "நாங்கள் ஏற்கனவே இது குறித்துக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளோம். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மக்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காக, இப்படிப்பட்ட கேலிச்சித்திரம் மற்றும் அவதூறு கருத்துக்களை வெளியிடுவது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் இதற்கான பதில் கிடைக்கும். மக்கள் இதற்கான தக்க தண்டனை வழங்குவார்கள்," என்று குறிப்பிட்டார்.

சர்வதேச யோகா தினம் குறித்த கேள்விக்கு, "யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதை பாரதப் பிரதமர் முன்னின்று நடத்துகிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்," என்று எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியை நிறைவு செய்தார்.