திமுகவைச் சேர்ந்த வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரைச் சேர்ந்த அன்பரசு (67) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது பெயரில் பவர் பத்திரம் வைத்திருந்த நிலம் ஒன்றை வாங்குவதற்காக, சித்தார்த் மேலாண்மை இயக்குநராக உள்ள கோல்ட்பெட் பாலிமர்ஸ் லிமிடெட் நிறுவனம் அணுகியதாக கூறப்படுகிறது.
அந்த நிலத்தை தனது மூலமாக பெற்றுக்கொண்ட பிறகு, தனக்கு வழங்க வேண்டிய கமிஷன் தொகையை தராமல் மோசடி செய்ததாக அன்பரசு குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை அண்ணாநகர் ரவுண்டானா பகுதியில் கமிஷன் தொகை குறித்து கேட்டபோது, சித்தார்த் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தன்னை சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியின் உதவியாளர் ஆசைத்தம்பி, திமுக 102-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராணி ரவிச்சந்திரன், ஆதிநாராயணன் மற்றும் சித்தார்த் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த புகாரின் அடிப்படையில், உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, ஏமாற்றுதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நான்கு பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் திமுக வட்டாரத்திலும் அரசியல் அரங்கிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.