இந்தியர்களின் கனவு தேசமாகத் திகழ்ந்த அமெரிக்கா, தற்போது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கே சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக ஒரு புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் தற்போது சுமார் 54 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஒரு காலத்தில் அமெரிக்காவில் செட்டில் ஆவதையே லட்சியமாகக் கொண்டிருந்த இந்தியர்களில், இப்போது 40 சதவீதம் பேர் அந்த நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக 'கார்னகி எண்டோவ்மென்ட்' நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதில் 14 சதவீதம் பேர் உடனடியாக வெளியேறத் தீவிரமாக உள்ளனர்; 26 சதவீதம் பேர் எப்போதாவது வெளியேறும் எண்ணம் தங்களுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் சூழலும் நிதி நெருக்கடியும்
இந்தியர்கள் அமெரிக்காவை வெறுக்கத் தொடங்கியதற்கு முக்கியக் காரணமாகத் தற்போதைய அரசியல் சூழலே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அதிபர் டொனால்டு டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் போக்கு தங்களுக்குப் பிடிக்கவில்லை என 71 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இது தவிர, விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை மற்றும் குழந்தை வளர்ப்புச் செலவுகளால் ஏற்படும் நிதி நெருக்கடியே தாங்கள் வெளியேற விரும்புவதற்கு 54 சதவீதம் பேர் காரணமாகக் கூறியுள்ளனர்.
பாதுகாப்பு அச்சம்
பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களைத் தாண்டி, பாதுகாப்பு குறித்த அச்சமும் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது. சுமார் 41 சதவீதம் பேர் அமெரிக்காவில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால், வல்லரசு நாடு என்ற பிம்பம் மறைந்து, இந்தியர்கள் தங்களது சொந்த ஊருக்கே திரும்ப நினைக்கும் சூழல் உருவாகியுள்ளது.