விளையாட்டு

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: குரோஷியாவை வீழ்த்திய போர்ச்சுகல்.. ஆஸ்திரியாவை துவம்சம் செய்த ஸ்பெயின்!

By Christon
03 Jul 2026, 07:26 AM
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்று நடைபெற்ற போட்டிகளில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகலும், ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற த்ரில்லான போட்டிகளில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகலும், ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

குரோஷியாவை வீழ்த்திய போர்ச்சுகல்

கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடைபெற்ற போர்ச்சுகல் - குரோஷியா இடையிலான ஆட்டத்தின் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0-0 எனச் சமநிலையில் முடிந்தது. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியின் 53-ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிச் முதல் கோலை அடித்துத் தன் அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதையடுத்து ஆட்டத்தை தீவிரப்படுத்திய போர்ச்சுகல் அணிக்கு 68-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அநாயசமாகக் கோலாக மாற்றி 1-1 எனச் சமநிலை ஏற்படுத்தினார். 90 நிமிடங்கள் முடிந்தும் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது ஆட்டத்தின் 90+4-ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கொண்ட்சாலோ ராமோஸ் அபாரமாக ஒரு கோல் அடித்து அணியை 2-1 என வெற்றி பெறச் செய்தார். இந்தத் தோல்வியால் குரோஷியா தொடரிலிருந்து வெளியேறியது.

ஆஸ்திரியாவை துவம்சம் செய்த ஸ்பெயின்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு நாக்-அவுட் போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 36-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிகெல் ஒயார்ஜபால் முதல் கோலை அடித்துத் தன் அணியை முன்னிலை பெறச் செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் ஸ்பெயின் அணியின் ஆதிக்கமே நீடித்தது. போட்டியின் 66-ஆவது நிமிடத்தில் பெட்ரோ பொர்ரோ ஒரு கோலும், ஆட்டத்தின் இறுதிப் பகுதியான 89-ஆவது நிமிடத்தில் மிகெல் ஒயார்ஜபால் தனது இரண்டாவது கோலையும் அடித்து அசத்தினர். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரியா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது.