ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ் லீக்' (BBL) வரலாற்றிலேயே முதன்முறையாக, அதன் புதிய சீசனின் தொடக்கப் போட்டி இந்தியாவின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011-ஆம் ஆண்டு 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' அமைப்பால் தொடங்கப்பட்ட பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ், சிட்னி தண்டர் உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இந்தத் தொடரின் புதிய சீசனை விரைவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கிரிக்கெட் தொடருக்கான உலகளாவிய பார்வையாளர்களை மேலும் ஈர்க்கும் நோக்கில், சில போட்டிகளை ஆஸ்திரேலியாவிற்கு வெளியே இந்தியாவில் நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியம் திட்டமிட்டுள்ளது.
பிசிசிஐ-யுடன் பேச்சுவார்த்தை
இந்தியாவில் போட்டிகளை நடத்துவது தொடர்பாகக் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இடையே தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்த ஆலோசனைகளின் முடிவில், 2026-ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த இரு வாரியங்களும் இணைந்து முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு
சென்னையில் பிக் பாஷ் போட்டி நடைபெற உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூலை மாதம் பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, இந்த முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில், சென்னை மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.