திமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல், கமிஷன் மற்றும் கட்டிங் கலாசாரம் குறித்து தற்போது பேசியிருப்பதற்கான காரணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், "அப்போது மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார்கள். திமுக ஆட்சியில் ஒரு சதுர அடிக்கே நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் வசூலிக்கப்பட்டது. கமிஷன், கட்டிங், ஊழல் என பேசப்பட்ட அந்த நிலையை தற்போதைய ஆட்சியில் ஒழித்துவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், "நான் திமுக கூட்டணியில்தான் இருந்தேன். கூட்டணியில் இருந்தபடியே அதைப் பற்றி விமர்சிப்பது அரசியல் தர்மமல்ல. கூட்டணிக்குள் இருந்துகொண்டு கூட்டணியையே தாக்கிப் பேசுவது அயோக்கியத்தனம். கூட்டணி தர்மத்தை மதித்ததால்தான் அப்போது அந்த விஷயங்களைப் பற்றி பேசவில்லை. அதுதான் சரியான அணுகுமுறை என்று நம்பினேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய வைக்கோ, "ஒரு கட்சி கூட்டணிக்குள் இருந்துகொண்டு தனது கூட்டணிக் கட்சியையே பொதுவெளியில் கண்டிப்பது நாகரிகமான அரசியல் அல்ல. நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள். ஒரு மணி நேரம் கூட கேளுங்கள்; நான் அனைத்துக்கும் பதில் சொல்வேன்" என வைகோ கூறினார்.