கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்தத் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், அந்தக் காலக்கெடுவுக்குள் மனு தாக்கல் செய்யப்படாததால் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மிலானி தரப்பு வழக்கறிஞர்கள், தேர்தல் வழக்கு உரிய காலக்கெடுவுக்குள்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், உயர்நீதிமன்றப் பதிவுத்துறையும் மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கு எண்ணை வழங்கியுள்ளதால், வழக்கின் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. அருள்முருகன், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று இந்த மனு மீதான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜி. அருள்முருகன், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மிலானி தொடர்ந்த பிரதான தேர்தல் வழக்கின் விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.