அரசியல்

'மதுரை காவல் நிலைய மரணம்! PUNCH DIALOG பேசி ஆட்சி நடத்தும் DUMMY CM!' - உதய் விளாசல் !

By Santhosh V
14 Nov 2026, 03:55 PM
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகங்களை எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலைய கழிவறையில் அவர் தூக்கிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

லாரி தீ விபத்து புகார்.. காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்ததாக அதன் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் சந்தேகம் இருப்பதாக கருதிய காவல்துறையினர், பாலகிருஷ்ணனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு காவல் ஆய்வாளர் அறையில் அவரை அமர வைத்துவிட்டு, லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காக காவலர்கள் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் காவலர்கள் திரும்பி வந்தபோது, காவல் நிலைய கழிவறையில் பாலகிருஷ்ணன் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் அங்கேயே உயிரிழந்தது எப்படி என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துள்ளது.

காவல் மரணமா? தற்கொலையா? உறவினர்கள் போராட்டம்!

பாலகிருஷ்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தது எப்படி என்றும், அவருக்கு என்ன நெருக்கடி கொடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பாலகிருஷ்ணனின் உடலை உறவினர்களிடம் காண்பிக்காமல் அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

'விசாரணைக்குச் சென்றவர் தற்கொலை செய்யும் அளவுக்கு என்ன நெருக்கடி?'

இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகும் காவல் மரணங்கள் தொடர்வதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், புகார் அளிக்கச் சென்ற பாலகிருஷ்ணனை இரவு நேரத்தில் விசாரணைக்கு அழைத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல் நிலைய கழிவறையில் தூக்கிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் பாலகிருஷ்ணனுக்கு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டது எப்படி? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? என்ற சந்தேகத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

இந்த கேள்விகளுக்கு காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் முறையாக பதில் அளிக்க வேண்டும் என்றும், பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடலூரிலும் காவல் நிலையத்தில் பெண் தீக்குளிப்பு!

இதனிடையே, கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று புகார் அளிக்கச் சென்ற பெண் ஒருவர் காவல் நிலையத்திலேயே தீக்குளித்த சம்பவத்தையும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


'Punch Dialogue பேசுவதால் மட்டும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியுமா?'

தனது துறையில் நடைபெறும் சம்பவங்களுக்கு பொறுப்பேற்கவோ, உரிய நடவடிக்கை எடுக்கவோ முடியாமல் முதலமைச்சர் இருப்பதாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், Punch Dialogue பேசி ஆட்சி நடத்தும் முதலமைச்சர், சட்டம் ஒழுங்கை எப்போது பாதுகாப்பார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலகிருஷ்ணனின் மரணம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அவரது மரணத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை காவல் நிலைய மரணம் தொடர்பாக உறவினர்களின் போராட்டம், எதிர்க்கட்சிகளின் கேள்விகள் என விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் காவல்துறையின் விசாரணை மற்றும் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.