தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புபடுத்தி சர்ச்சையாக விமர்சித்து பேசியதாக த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி விவசாயிகளுடனான போராட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக விஜய் தீவிரம் காட்டவேண்டும் எனவும், த.வெ.க. அரசு அளித்த பயிர் கடன் தள்ளுபடி என்ற வகுருதியின்படி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் விஜய்க்கு இருக்கக்கூடிய ஒரே கவலை, தி.மு.க. மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது மட்டுமே. எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு ”தண்ணீர்” வர வேண்டும் (நான் காவிரியைச் சொன்னேன்)” என்று பேசியிருந்தார்.
அதுமட்டுமின்றி, “திருட்டு லாட்டரி விற்கிற ஓர் அமைச்சர்; திருட்டு வி.சி.டி விற்கிற ஓர் அமைச்சர்; பிளாக் டிக்கெட் விற்கிற ஓர் அமைச்சர்; உருட்டுக் கட்டையோடு சுற்றித் திரிகின்ற ஓர் அமைச்சர்; எல்லாவற்றிற்கும் மேலாகப் போதைப் பவுடர் அமைச்சர்.. இப்படி மொத்த அமைச்சரவையுமே ஒரு ஜோக்கர் கூட்டமாக இன்றைக்குத் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.. தரங்கெட்ட அரசு” த.வெ.க எம்.எல்.ஏ.க்களை பற்றியும் அமைச்சர்களை பற்றியும் விமர்சித்து பேசியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சை எதிர்க்கும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதும் த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உதயநிதியின் மீது மகளீர் ஆணையம் அளித்துள்ள புகாரைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையங்களில் த.வெ.க.வினர் புகார் கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.