திருச்செந்தூர் கோவிலில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் ரமேஷ் ஐய்யங்கார் அர்ச்சகர்களை இழிவுபடுத்தியதாக திருச்செந்தூர் சட்டமன்ற திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். அதற்கு அமைச்சர் ரமேஷ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசன கட்டண முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின் பேரில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சாதாரண உடையில் முகக்கவசம் அணிந்து ரகசிய ஆய்வு மேற்கொண்டார். அப்போது விரைவு தரிசனத்திற்காக அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் ரூ.4,000 லஞ்சம் கேட்க, கையில் பணம் இல்லை என்றதும் அதனை ஜி-பே (GPay) மூலம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதையடுத்து அர்ச்சகர் உட்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
திமுக முன்னாள் அமைச்சர் கண்டனம்
அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையை விமர்சித்துத் திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "ஆய்வு என்ற பெயரில் திருச்செந்தூர் கோவிலின் புகழைச் சிறுமைப்படுத்திய அமைச்சர் ரமேஷுக்குக் கண்டனங்கள். மரபு வழியாகப் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய உதவி வரும் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை அமைச்சர் இழிவுபடுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சாதிப் பெயர் அரசியல் - அமைச்சர் ரமேஷ் காட்டம்
அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அதில், "திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா R.ராதாகிருஷ்ணன் (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை. நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை. இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.