அரசியல்

"நமது தயவில்தான் தற்போதைய ஆட்சி நடக்கிறது": திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு!

By Christon
06 Jun 2026, 01:08 PM
தற்போதைய ஆட்சி திமுகவின் தயவில்தான் நடப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக எதிர்க்கட்சியாக உள்ள நிலையிலும், தற்போதைய ஆட்சி தங்களின் தயவில்தான் நடப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "பொதுவாக ஒரு இயக்கத்தில் இருந்து பிரிந்து செல்பவர்கள் ஆளுங்கட்சியை நோக்கித்தான் போவார்கள். ஆனால், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் இந்தச் சூழலில் நீங்கள் பதவிக்காகவோ, சொகுசாக வாழ்வதற்காகவோ வராமல், தமிழ் சமுதாயத்திற்காகப் பணியாற்ற வந்துள்ளீர்கள்" என்று பாரட்டினார்.

மேலும், திமுகவிற்கு வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரக்கூடியது என்றும், தோல்வியைக் கண்டு தொண்டுவிடாமல் பணியாற்றக் கூடியவர்கள் திமுகவினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் இப்போது ஆட்சி நடப்பதே தங்களின் தயவிலும், தங்களது கூட்டணிக் கட்சிகளின் தயவிலும் தான் என்று தெரிவித்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரிந்து சென்றபோது, நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியோ அல்லது பாஜகவோ வந்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காகவே அவர்களின் விருப்பத்திற்குத் தடை விதிக்காமல் வழியனுப்பி வைத்ததாகக் குறிப்பிட்டார்.

தங்களின் தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் உறுதியேற்றுப் பணியாற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.