தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்கத்தை எட்டியுள்ள நிலையில், தெற்காசியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என்பதே தமது இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 11.29 சதவீதமாகவும், 2025-26 நிதியாண்டில் 10.83 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP), ரூ.31.19 லட்சம் கோடியிலிருந்து ரூ.35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த இமாலய சாதனையைத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஏற்கனவே சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! திராவிட மாடல் தனித்துவமான மாடல்! சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!
முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.
சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! இது தொடக்கம்தான்.உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!
நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.