வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சாதி சான்றிதழ் பெறும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில், மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த அடையாள அட்டையில் மாணவர்களின் முகவரி, சாதி சான்றிதழ், ரத்த வகை, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என்றும், முதற்கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக ஐடி விங், “பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் ஐ.டி. கார்டு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது” என விமர்சித்துள்ளது.
திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக நீதி குறித்து பேசும் தமிழகத்தில், மாணவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் நிலை உருவாகக் கூடாது. கல்வி வாய்ப்புக்காக மட்டுமே சாதிச் சான்றிதழ் பயன்படுத்தப்பட வேண்டும்; அது அடையாளமாக கழுத்தில் தொங்க விடுவதற்கானது அல்ல” என்று தெரிவித்துள்ளது.
மேலும், “ஒரு மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி விவரம், தொடர்பு எண், அவசர தேவைக்கான ரத்த வகை போன்ற தகவல்கள் மட்டுமே அடையாள அட்டையில் இருக்க வேண்டும். சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் நடைமுறை மாணவர்களிடையே பிரிவினையையும் மோதலையும் உருவாக்கும்” என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் திமுக ஐடி விங் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது. மாணவர் அடையாள அட்டை விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.