அரசியல்

வாக்கு தவறிவிட்டாரா நாட்டாமை? ரத்தக்கண்ணீர் சிந்தும் சொந்த சமுதாய மக்கள்.

By Sumalekha
09 Aug 2026, 12:00 PM
பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

இதுகுறித்து, நாடார் சங்கத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். "90களில் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் சரத்குமார். அப்போதே அவர் தன்னை ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்று காட்டிக்கொண்டார். ஆனாலும், 'நாட்டாமை' பட ஒளிபரப்பு தொடர்பாக, ஜெயலலிதா மேல் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி. 1996 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவை வீழ்த்த தி.மு.க. கூட்டணிக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் சரத்குமார். தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததும் தி.மு.க.விலேயே தன்னை இணைத்தும் கொண்டார்.

தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளராக சரத்குமார் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். அவரது பிரசாரத்துக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து அடுத்த எம்.ஜி.ஆர் என்று பத்திரிகைகள் புகழ்ந்தன. ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அவர்மீது கருணாநிதிக்கு தனிப்பட்ட முறையில் பாசம் இருந்தாலும் அவரால் தி.மு.க.வில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. தொடர்ந்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கேயும் அவரால் நீடிக்க முடியவில்லை.

அந்த நிலையில்தான் தே.மு.தி.க.வை தொடங்கி விஜயகாந்த் வேகமாக வளர்ந்து வந்தார். அவரைப்போல் ஏன் நாமும் தனிக்கட்சி தொடங்கக் கூடாது என்று நினைத்தார் சரத்குமார். குறிப்பாக, காமராஜரை முன்னிறுத்தி தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. இதையொட்டி, விருதுநகரில் காமராஜர் மணிமண்டபமும் அமைக்க சரத்குமார் திட்டமிட்டார் அதன்படி, விருதுநகர் அருகே உள்ள கன்னிக்குடி கிராமத்தில் 15 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கு 2007ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி நாடார் சமுதாயத் தலைவர்களை அழைத்து மணிமண்டபத்திற்கு பிரமாண்டமாக அடிக்கல் நாட்டினார். அந்த சூட்டுடனேயே அவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியையும் தொடங்கினார்.

இதற்கிடையே 2019ம் ஆண்டு காமராஜரின் 117வது பிறந்த நாளில் காமராஜர் சிலை வைத்து இரண்டு நீரூற்றுகள் கொண்ட கட்டிடத்தை கட்டி இதுதான் காமராஜர் மணிமண்டபம் என்று திறப்பு விழா நடத்தினார். ஆனால், அதன் பிறகு அந்த மணிமண்டபத்தை மேம்படுத்த ஒரு செங்கலைக்கூட அவர் எடுத்து வைக்கவில்லை என்பதுதான் வேதனை.

இதற்கிடையே அந்த நிலத்தின் விலை ஏகத்துக்கும் உயர்ந்தது. வெறும் சிலையோடு இருக்கும் மணிமண்டபத்தைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது என்று நினைத்த சிவகாசியைச் சேர்ந்த 'ஆரோக்கியமான' தொழிலதிபர் ஒருவர், அந்த இடத்தை வாங்கி சொந்த செலவில் பிரமாண்டமாக காமராஜர் மணிமண்டபத்தை அமைக்க நினைத்தார். இடத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், திடீரென அந்த இடத்தை மதுரையைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கிவிட்டது. இடத்தை வாங்கிய அவர்கள் தற்போது பிளாட் போடும் பணியை செய்துவருகிறார்கள். சொல்லப்போனால், அதன் பிறகுதான் அந்த இடம் விற்கப்பட்ட தகவலே வெளியே தெரிந்தது. நாடார் சமுதாயத்துக்கு நல்ல தலைவர் கிடைத்துவிட்டார் என அவர் பின்னால் நாங்கள் அணிவகுத்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டார். 'காமராஜர் மணிமண்டபத்தைக் கட்ட முடியாமல் சரத்குமார் இடத்தை விற்றுவிட்டார்' என யாரும் சொல்லமாட்டார்கள். 'செல்வ செழிப்போடு இருக்கும் நாடார் சமுதாயத்தினரால் காமராஜருக்கு ஒரு மணிமண்டபம்கூட கட்ட முடியவில்லையே' என்றுதான் பேசுவார்கள்" என ஆதங்கப்பட்டனர்.

இதற்கு சரத்குமார் என்ன சொல்கிறார்? அவரிடமே கேட்டோம். “பெருந்தலைவர் பிறந்த ஊரான விருதுநகரில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது எனது கனவாகவும் லட்சியமாகவும் இருந்தது. ஏழு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து ஆரம்பகட்டப் பணிகளை தொடங்கினேன். ஆசியாவிலேயே இதுபோல் ஒரு மணிமண்டபம் இருக்கக்கூடாது என நினைத்தேன். ஆனால், தனி ஒருவனாக என்னால் அவ்வளவு பணம் செலவு செய்ய முடியவில்லை. கட்டப்பட்ட மணிமண்டபத்தையும் பராமரிப்பதற்கு அதிக செலவானது.

இந்த நிலையில் இரவு நேரங்களில் அங்கு சமூக விரோதிகள் உள்ளே புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது எனவே மணிமண்டப திட்டத்தை கைவிட முடிவு செய்தேன். மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையை விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். பள்ளியில் வைத்து நானே திறந்துவைக்க இருக்கிறேன். இவ்வனவு பெரிய இடமாக இல்லாவிட்டாலும் வேறு எங்காவது ஒரு சிறிய இடத்திலாவது நிச்சயமாக நான் நினைத்த மாதிரி பெருந்தலைவருக்கு மணிமண்டபம் அமைப்பேன். அது நடந்தே தீரும் அந்த வகையில் என் லட்சியத்தில் இருந்து பின்வாங்கமாட்டேன்" என்றார்.

வாக்கு தவறிவிட்டாரா நாட்டாமை?

- குமுதம் செய்திகளுக்காக எஸ்.அண்ணாதுரை.