அரசியல்

ஓபிஎஸ் எம்.எல்.ஏ. பதவிக்கு சிக்கல்.. சபாநாயகர் அப்பாவு பதில்

By Jayakumar
16 Jun 2025, 03:54 PM
ஓ.பன்னீர் செல்வத்தின் எல்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி அவரது தொகுதியை சேர்ந்த நபர் அளித்த புகாரின் பேரில் சட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், ராதாபுரம் கால்வாயில் ஆண்டுதோறும் ஜூன் 15ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தோவாளை கால்வாய் நிலப்பாறை என்ற இடத்திலிருந்து ராதாபுரம் கால்வாய்க்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

தினமும் 150 கன அடி வீதம் 138 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள 52 குளங்கள் மூலம் 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் ராதாபுரம் கால்வாய் செல்லும் சுமார் நூற்றுக்கணக்கான கிராம பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ராதாபுரம் கால்வாய் இருந்து வருகிறது.

தண்ணீர் திறந்து விடப்பட்ட பின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவரிடம், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டுமென போடிநாயக்கநூரை சேர்ந்த மிலாணி என்பவர் மனு அளித்ததின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஓ.பன்னீர் செல்வத்தின் மீது அதிமுகவை சேர்ந்த கொறாடாவோ, நிர்வாகிகளோ இதுவரையில் புகார் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், அவரது தொகுதியை (போடிநாயக்கனூர்) சேர்ந்த ஒருவர் புகார் அளித்திருப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 10-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உரிய சட்ட ஆய்வு செய்து சட்டமன்றத்தின் விதிப்படியும் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிலளித்தார்.