பல ஆண்டுகளாகவே அரசியல் வட்டாரத்தில் ரஜினியின் பெயரும் அவரைப் பற்றியான செய்தியும் அடிக்கடி அடிப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பாஜக முன்னாள் நிர்வாகியான அண்ணாமலை கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டதில் இருந்து ரஜினியின் பெயர் அவ்வப்போது அடிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
புதிதாக கட்சி தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையும் ரஜினிகாந்தின் ஆதரவு வேண்டும் என்று கேட்டதாக தொலைபேசி நேரலை மூலம் தெரிவித்திருந்தார். மேலும் ராகவா லாரான்ஸ் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவிய நிலையில், தலைவர் கட்சி தொடங்கினால் தன்னுடைய முழு ஆதரவும் அவருக்கு தான் என்று கூறி இருந்தார்.
இப்படி தொடர்ந்து ரஜினியின் பெயர் அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ள நிலையில், ரஜினியின் ரசிகர் நலச் சங்கம் ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டது. அதாவது சூப்பர் ஸ்டாரின் பெயரையும் அவரின் புகைப்படத்தையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இப்படி தொடர்ந்து ரஜினியின் பெயர் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவே இருக்கும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ரஜினியை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசியச் செயலாளர் மற்றும் மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மற்றும் இதர உள்ளூர் கட்சிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் சென்னை, போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கே சென்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தலைவர்கள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கீழ் கடந்த 12 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட முக்கிய உள்கட்டமைப்பு, நலத்திட்டங்கள் மற்றும் ஆளுகை முன்னெடுப்புகளை எடுத்துரைக்கும் சிறப்புப் புத்தகத்தை அவர்கள் ரஜினிக்கு பரிசளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.