அ.தி.மு.க-வில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த உட்கட்சிப் பிளவைத் தொடர்ந்து, எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து இணைந்துகொண்டுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட மோதலால் எஸ்பி வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பு தனியாகப் பிரிந்து செயல்பட்டது. இதற்கிடையில், தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், அடுத்தடுத்து சில எம்எல்ஏக்கள் இபிஎஸ் பக்கம் சென்றனர்.
மொத்தம் இருந்த 47 எம்.எல்.ஏ-க்களில் 4 பேர் ஏற்கனவே ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்துவிட்டனர். இந்தச் சூழலில், எஸ்பி வேலுமணி தலைமையில் 13 எம்.எல்.ஏ-க்கள் இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வருகை தந்து தங்களை மீண்டும் இ.பி.எஸ் தரப்புடன் இணைத்துக் கொண்டனர். இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து, அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் அளிக்கப்பட்டிருந்த மனுவைத் திரும்பப் பெற அ.தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதேநேரம், எஸ்பி வேலுமணி தரப்பு இ.பி.எஸ்-ஸுடன் இணைந்தாலும், சி.வி. சண்முகம், சி.விஜயபாஸ்கர் மற்றும் அருண்மொழிதேவன் ஆகிய 3 முக்கிய எம்.எல்.ஏ-க்கள் மட்டும் இன்னும் இ.பி.எஸ் இல்லத்திற்கு வரவில்லை. இவர்கள் மூவரும் தனியாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.