அரசியல்

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

By Christon
07 Jul 2026, 11:04 AM
அரசு வழக்கறிஞர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
தமிழக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, தவெக அமைச்சர் நிர்மல்குமார் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்குத் தவெக ஆட்சியில் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாகவும், அமைச்சர் ஆனந்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த நியமனங்கள் நடப்பதாகவும் தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், இது முற்றிலும் தவறான தகவல் என்று அமைச்சர் நிர்மல்குமார் மறுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மிகவும் நேர்மையாகவும், விதிகளுக்கு உட்பட்டும் மட்டுமே நடந்து வருகிறது; இதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. இதுவரை 3 மாவட்டங்களுக்கு மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது செய்யப்பட்டுள்ள இந்த நியமனங்கள் அனைத்தும் 6 மாத காலத்திற்கான தற்காலிகமானவை மட்டுமே" என்று கூறினார்.

மேலும், "அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு யாராவது பணம் பெற்றிருந்தாலோ அல்லது யாருடைய பெயரையாவது தவறாகப் பயன்படுத்தியிருந்தாலோ அவர்கள் மீது அரசு சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை யாராவது பணம் வாங்கியிருந்தால், பணம் கொடுத்தவர்கள் தாராளமாகப் புகார் அளிக்கலாம்; அவர்கள் மீது உரிய நடவடிக்கை பாயும்" என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.