நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பல்வேறு கருத்துக்கணிப்புகளையும் தலைகீழாக மாற்றி, தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இருதரப்புக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று உறுதியாக நம்பப்பட்ட திமுகவின் படுத்தோல்வி, அறிவாலய வட்டாரங்கள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பலத்த மன உளைச்சலையும் அதிர்வலையையும் உண்டாக்கியுள்ளது.
இந்த அரசியல் மாற்றம் மதுரை மாவட்டத்திலும் மிகத் தீவிரமாக எதிரொலித்துள்ளது. மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி என மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மதுரையில், வழக்கமாக திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்களின் பலத்தை மாறி மாறி நிரூபித்து வந்தன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட, இரு கட்சிகளும் தலா 5 இடங்களைக் கைப்பற்றிச் சமபலத்துடன் விளங்கின. ஆனால், இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், மேலூர் மற்றும் திருமங்கலம் ஆகிய இரு தொகுதிகளைத் தவிர, மீதமுள்ள 8 தொகுதிகளையும் தமிழக வெற்றி கழகம் அதிரடியாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
உதவியாளர்களின் 'சூசக' மிரட்டலும்... ஸ்வீட் பாக்ஸ் பஞ்சாயத்தும்!
மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான ஆர்.மூர்த்தி, தவெக வேட்பாளர் எஸ். கார்த்திகேயனிடம் 16,547 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்பட்ட மூர்த்தியின் இந்தத் தோல்வி, திமுக தலைமையைக் கதிகலங்க வைத்துள்ளது.
தோல்வி தந்த விரக்தியின் காரணமாக, முன்னாள் அமைச்சர் ஆர்.மூர்த்தி பொதுவெளியிலேயே தன் கழகத் தோழர்களைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமன்றி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது உதவியாளர்களை அழைத்த அவர், "அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உங்களுக்கு வேலையில்லை. குடும்பச் செலவைச் சமாளிக்க இதை வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி ஒரு 'ஸ்வீட் பாக்ஸ்' கொடுத்துள்ளார்.அதைப் பெற்றுக் கொண்ட உதவியாளர்களோ, "அண்ணே, ஒருவேளை இ.டி (ED - அமலாக்கத்துறை) எங்களைக் கூப்பிட்டு விசாரித்தால் நாங்கள் என்ன சொல்வது?" என்று சூசகமாகக் கேட்டு, மறைமுக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் சட்டென உஷாரான முன்னாள் அமைச்சர், நிலைமையைச் சமாளிக்க மேலும் ஐந்து ஸ்வீட் பாக்ஸ்களைக் கூடுதலாகக் கொடுத்து அவர்களைச் சரிக்கட்டியதாக அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 2026 தேர்தல் முடிவுகள் வெளியானது முதல், அறிவாலயம் கடுமையான அரசியல் அனலில் தகித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.