அரசியல்

திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக முயற்சி.. சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி!

By Christon
13 May 2026, 04:12 PM
திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அதிமுகவிடம் ஒப்படைக்க திமுக முன்வந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் அதிமுகவின் உட்கட்சிப் பூசல் தற்போது பகிரங்கமாக வெடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி - சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக அதிமுகவினர் தவெகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

ரகசியப் பேச்சுவார்த்தை

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.வி. சண்முகம், "எடப்பாடி பழனிசாமி தன்னைச் சட்டமன்றக் குழுத் தலைவராக எம்.எல்.ஏ-க்கள் தேர்ந்தெடுத்ததாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது. அந்தக் கூட்டமே நடைபெறவில்லை; அவர் அளித்த கடிதத்தில் உள்ள கையெழுத்துகள் போலியானவை. புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருந்தபோது, 'நான் டெல்லியில் பேசிவிட்டேன், அவர்கள் சம்மதித்துவிட்டனர். திமுகவின் வெளியில் இருந்து ஆதரவளிக்கும். நான் மீண்டும் முதல்வராகப் போகிறேன்' என்று எங்களிடம் இபிஎஸ் கூறினார். புதுவையில் உண்மையில் என்ன பேசினார் என்பதை வெளிப்படையாகச் சொல்ல அவர் தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

திருமாவளவனை முதல்வராக்க முயற்சி?

தொடர்ந்து பேசிய அவர், "திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அதிமுகவிடம் ஒப்படைக்க திமுக முன்வந்தது. ஆனால், தான் மட்டுமே முதல்வராக இருக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்தார். 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தோல்வி என்று கருதாமல், ஒரு மிகப்பெரிய வெற்றியாகச் சித்தரிக்கும் அவர், ஒரு பொதுச் செயலாளராகத் தோல்விக்குச் சிறு பொறுப்பேற்கக் கூட மறுக்கிறார். தற்போது பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களாகிய நாங்கள் தேர்ந்தெடுத்த புதிய குழுத் தலைவர் மற்றும் கொறடா அடங்கிய கடிதத்தைச் சபாநாயகரிடம் வழங்கியுள்ளோம். இரண்டு கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.