'நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன்' என்ற ஒற்றை வாக்கியம் மூலம் முதல்வர் விஜய்யை சீண்டுகிறார் நடிகர் தனுஷ் என்பதுதான் வலைதள ஹாட் டாபிக்!நிதானமாக சிந்தித்து, தெளிவாகக் காய்களை நகர்த்திவரும் தனுஷ், அரசியலில் விஜய் பாணியைப் பின்பற்றப்போவதில்லை என்பதைத்தான் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தனுஷ் நடித்திருக்கும் 'ஓம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, கடந்த நவம்பர் 6ம் தேதி குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வில் ரசிகர்களின் எதிர்பார்ப்பின்படியே தனுஷ் அரசியலைத் தொட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். அதைவிட, நிகழ்ச்சி முடிந்து தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவுதான் ஹைலைட் தான் அரசியலுக்கு வரப்போவதையும், அது கண்டிப்பாக விஜய்யின் பாதையாக இருக்காது என்பதையும் சேர்த்தே தனுஷ் வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள்.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். தனுஷ் தனது ஆடியோ லாஞ்ச் பேச்சின்போது, செய்திகளில் உலா வரும் தகவல்களுக்குப் பதிலளித்திருக்கிறார். எனக்குப் பின்னால் இவர் இருக்கிறார், அவர் இருக்கிறார் என்கிறார்கள். எனக்குப் பின்னால் மக்கள் இருக்கிறார்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள். புதுசா ஒண்ணு வரும்போது அதிர்வு இருக்கத்தானே செய்யும். எப்போதும் என் ரசிகர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திட மாட்டேன்' என்று பேசியிருக்கிறார் தனுஷ்
'புதுசா ஒண்ணு வரும்போது என்பதற்கு 'அரசியலில் புதிதாக ஒரு ஃபோர்ஸ் வரப்போகிறது. அது நான்தான்' என்பதைத் தவிர வேறு என்ன அர்த்தமாக இருக்க முடியும்? இது ஒருவகையில் விஜய்யையும் குறிக்கும். ஏனெனில், தி.மு.க., அ.தி.மு.க. என்ற இருபெரும் ஜாம்பவான்கள் இருக்கும்போதே விஜய் அரசியலுக்கு வந்தது பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. அதே அதிர்வை தன்னுடைய அரசியல் பிரவேசமும் உணர்த்தும் என்பது தனுஷின் நம்பிக்கை.
அதேபோல், 'மக்கள் என் பின்னால் இருக்கிறார்கள்' என்கிற தொனி நடிகர் பேசும் பேச்சல்ல. நடிகர்கள் என்றால் 'ரசிகர்கள் என் பின்னால் இருக்கிறார்கள்' என்று மட்டும்தான் சொல்வார்கள், மக்கள் என்று சொல்லியிருப்பதே அவரது அரசியல் வருகைக்கான சிக்னல்தான் 'ரசிகர்களை தலைக்குனிய விடமாட்டேன்' என்று தெரிவித்திருப்பது இடையில் ரஜினியை சுட்டிக்காட்டுவது தான். ஏனெனில், ரஜினியும் அரசியலுக்கு வருவதற்காக ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக்கி, கடைசியில் பின்வாங்கினார். இதனால், ரஜினி ரசிகர்கள் தலைகுனியும் நிலை ஏற்பட்டது. அப்படி அரசியலுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு, பின்வாங்க மாட்டேன் என்பதுதான் தனுஷ் பேச்சின் உள் அர்த்தம்.
முன்னதாக, நிகழ்ச்சியில் ஏழாயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தனுஷைப் பார்ப்பதற்காக ஏராளமான இளைஞர்கள் நுழைவுச்சீட்டு இல்லாமலேயே அரங்கிற்குள் புகுந்துவிட்டனர். இதனால், நுழைவுச்சீட்டு வைத்திருந்தவர்களால் அரங்கிற்குள் வர முடியவில்லை. டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டும் அனுமதிக்கும் வகையில் கேட்டைத் திறந்தால், அங்கு திரண்டிருந்த பொதுமக்களும் உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்பதால் போலீஸார் மறுத்துவிட்டனர். இதைக் கண்டித்து தனுஷ் ரசிகர்கள் மீடியாக்களில் தங்களது ஆதங்கங்களைக் கொட்டித்தீர்த்தனர்.
இதைப்பற்றிக் கேள்விப்பட்ட தனுஷ். நிகழ்ச்சி முடிந்து இரவு 10.48க்கு பதிவிட்ட எக்ஸ் தள பதிவில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு என்று நான் ஆராய விரும்பவில்லை. நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது மறைமுகமாக முதல்வர் விஜய்யை குத்திக்காட்டுவதுதான். அதாவது கரூர் துயரத்தில் 41 பேர் பலியாகினர். நிதியுதவி, அக்குடும்பத்து பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றது, சென்னைக்கு வரவைத்து மன்னிப்புக் கேட்டது என்று பல நிகழ்வுகள் தேர்தலுக்கு முன்பாக நடந்துவிட்டன. எனினும், கரூர் துயரம் நடந்து ஓராண்டு முடிந்தும், விஜய் முதல்வராகியும் இப்போது வரை 'அச்சம்பவத்துக்கு நானும் ஒருவகையில் காரணமாகிவிட்டேன், அதனால் வருத்தம் தெரிவிக்கிறேன்' என்று பொறுப்பேற்கவில்லை.
அதுவே, தனுஷ் நிகழ்ச்சியில் யாருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை. டிக்கெட் இருந்தும் உள்ளே போக முடியாத சாதாரண நிகழ்வுக்கு, தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக தனுஷ் கூறியிருப்பதுதான் உண்மையான தலைவனுக்குரிய தகுதி என்று கமென்ட்டுகள் பறக்கின்றன. விஜய்யை குத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக தனுஷ் இப்படிப் பதிவிட்டாரா அல்லது உண்மையிலேயே மனம் வருந்திப் பதிவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். எப்படி இருந்தாலும், தனது அரசியல் நகர்வுகளைத் திட்டமிட்டு செய்யும் தனுஷ், ஒருபோதும் அது விஜய்யின் பாணியாக இருக்காது என்பதை இங்கு குறிப்பிடுகிறார் என்பது மட்டும் நிதர்சனம்' என்றனர்.
பெயர்கூற விரும்பாத தனுஷ் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம், "ரசிகர் மன்றத்தில் உள்ள அத்தனை பேரிடமும் 'அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா? என்று சர்வே எடுக்கப்பட்டது. அதில் 90 சதவிகிதம் பேர் 'அரசியலுக்கு வரவேண்டும்' என்றே பதில் அளித்தனர். அதன்பின்னர்தான் நற்பணி இயக்கமாக மாற்றுவது, மகளிரணி கூட்டம் நடத்துவது என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தன.
தற்போது வழக்கறிஞர் அணி, மருத்துவர்கள் அணி, ஐடி விங் என அணிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணிகள் நடக்கின்றன. விஜய் போல பெரிய மாஸ் ஹீரோ அல்ல தனுஷ் என்பது எங்களுக்கும் தெரியும். அதனால்தான் ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்தே விதையைப் போட ஆரம்பித்துவிட்டோம்" என்றனர்.
2031 களைகட்டப் போகுது!