அரசியல்

ஆட்டத்தை தொடங்கிய சிவிஎஸ்.. அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் சீக்ரெட் மீட்டிங்!

By Christon
14 Oct 2026, 01:53 PM
இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெகவின் எழுச்சியால் அதிமுக பலத்த பின்னடைைச் சந்தித்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமையே காரணம் எனக்கூறி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியின்றி தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர்களது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் மற்றும் சிலரைத் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்புக் கடிதம் அளித்து எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையே, அதிருப்தியில் இருந்த 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதற்கிடையில், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து அதிருப்தி நிலையிலேயே இருந்து வருகின்றனர். அவர்கள் வேறு கட்சிகளில் இணையவில்லை என்றாலும், அதிமுகவின் எந்தவிதமான கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக மீண்டும் மூன்றாவது இடத்தைப் பிடித்து கடும் பின்னடைவைச் சந்தித்தது. பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற தொகுதிகளையும் தற்போது இழந்துள்ளமை கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தோல்விகளை அடுத்து, கடந்த 12 ஆம் தேதி சென்னையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்தில் சி.வி.சண்முகம், நத்தம் விசுவநாதன், தங்கமணி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கடந்த 10 ஆம் தேதி அதிமுக தலைமை வெளியிட்ட 55-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டப் பட்டியலிலிருந்து சி.வி.சண்முகம் பெயர் முற்றிலும் தவிர்க்கப்பட்டது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இடைத்தேர்தல் தோல்விகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் மீண்டும் இன்று ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் சங்கராபுரம் எம்.எல்.ஏ. ராகேஷ், பண்ருட்டி எம்.எல்.ஏ. மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.