சென்னை திருவிக நகர் பகுதியில் நடைபெற்ற அரசுப் பள்ளி திறப்பு விழாவில், சென்னை மேயர் பிரியா மற்றும் தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதலாவதாகப் புளியந்தோப்பில் உள்ள உருதுப் பள்ளியின் புதிய கட்டிடத்தை மேயர் பிரியா ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அப்போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி தனியாகக் கத்தரிக்கோல் கொண்டு ரிப்பனை வெட்டினார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்குள்ளே நடைபெற்ற குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சியின் போது, மேயர் பிரியா விளக்கேற்றிவிட்டுத் தன் அருகில் இருந்த தவெக எம்.எல்.ஏ பல்லவிக்கு மெழுகுவர்த்தியைத் தராமல், அங்கிருந்த அரசு அதிகாரி ஒருவரிடம் கொடுத்தார். இதனால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ பல்லவி கோபித்துக் கொண்டு அந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது நிகழ்ச்சியாகப் புளியந்தோப்பு தொடக்கப் பள்ளியின் புதிய கட்டிடத்தை மேயர் பிரியா ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அதன் பின்னர் மேயர் பிரியா மற்றும் தொகுதி எம்.எல்.ஏ பல்லவி ஆகிய இருவரையும் குத்துவிளக்கேற்றுமாறு கூறி மெழுகுவர்த்தி கொடுக்கப்பட்டது. ஆனால், முன்னதாக நடந்த கசப்பான சம்பவத்தால் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ பல்லவி மெழுகுவர்த்தியை வாங்க மறுத்துவிட்டார்.
மேலும், "அனைத்து திரிகளையும் நீங்களே ஏற்றுங்கள்" என்று மேயரிடம் கூறி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அரசு விழாவில் மக்கள் பிரதிநிதிகள் இருவருக்கு இடையே பகிரங்கமாக ஏற்பட்ட இந்த மோதல் தற்போதைய அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.