சுத்தமான, ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருவதாக முதலமைச்சரும் அமைச்சர்களும் கிடைக்கும் மேடைகளில் கூறி வரும் சூழலில், அமைச்சர் ராஜ்மோகனின் சமீபத்திய பேச்சு தவெக அரசிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவி நியமனம் குறித்து அவர் பேசிய விவகாரம், தற்போது அரசியல் களத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
கலைமாமணி விருது வழங்குதல், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை அளித்தல் போன்ற பணிகளைச் செய்யும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நாட்டுப்புறக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று (நவ.1) நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்குத் தந்தால் அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி தருகிறேன் என்று ஒருவர் பேசினார். அதற்கு, ரூ.500 கோடி கொடுத்தாலும் தகுதி இல்லாதவருக்கு முதலமைச்சர் விஜய் பதவி தரமாட்டார் என்றும், ஒரு ரூபாய் கூட வாங்காமல் தகுதியான புஷ்பவனம் குப்புசாமிக்கே அப்பதவி வழங்கப்படும் என்றும் கூறி லயோலா மணியிடம் சொல்லி அனுப்பினேன்" எனத் பகிரங்கமாகப் பேசினார்.
"யார் அந்த நபர்?" - அதிமுக ஜெயக்குமார்
ஊழலை முற்றிலும் ஒழிப்பதாகக் கூறிக்கொள்ளும் தவெக அரசு, லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார் என்பதைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ரூ.5 கோடி பணத்துடன் யாரை லயோலா மணி அழைத்து வந்தார் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும். லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல, கொடுக்க முற்படுவதும் குற்றமே என்பதால் அந்த நபரின் பின்னணியை விளக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
பொறுப்புணர்ந்து பேச வேண்டும்: பெ.சண்முகம்
இதே விவகாரம் குறித்துச் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ரூ.5 கோடி கொடுக்க முன்வந்த நபர் யார் என்பதையும், அவர் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். அமைச்சரவையில் இருப்பவர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது மிக அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்
இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் ராஜ்மோகன் பேசிய ஆதாரத்தை முன்வைத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், இன்று (நவ.2) லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளித்துள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகனின் மேடைப் பேச்சு எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாகக் கிடைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் தரப்பிலிருந்தோ அல்லது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி தரப்பிலிருந்தோ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.