அரசியல்

விசிக மாநாட்டைப் புறக்கணித்த ஆளூர் ஷாநவாஸ்.. திமுகவில் இணையத் திட்டம்?

By Christon
18 Aug 2026, 12:27 PM
விசிக மாநாட்டை அக்கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் புறக்கணித்துள்ளது நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டை, கட்சியின் முதன்மைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் புறக்கணித்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் விசிக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் நாகை தொகுதியில் போட்டியிட்டு ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் அவருக்குப் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றபோதிலும், கட்சியின் முதன்மைச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டது. இதனிடையே, அமைந்த புதிய ஆட்சியில் அமைச்சரவையில் விசிக பங்கெடுத்துக் கூட்டணி அமைத்துள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட முதலே அரசின் செயல்பாடுகளை ஆளூர் ஷாநவாஸ் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆளுநர் விவகாரத்தில் உரிமைகள் சமரசம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், சமீபத்தில் திமுக சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, அணிகளும் ஆட்சிகளும் மாறினாலும் கொள்கைகளை மாற்றிக் கொள்ள முடியாது என்றும், சில மாதங்களுக்கு முன்பு வரை பேசிய கொள்கைப் பிடிப்பை விட்டுவிட்டு மலிவான அரசியலில் ஈடுபட முடியாது என்றும் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது.

விசிகவின் இந்த கூட்டணி நிலைப்பாட்டால் அதிருப்தியில் இருந்துவந்த ஆளூர் ஷாநவாஸ், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற கட்சியின் முக்கிய மாநாட்டைத் தவிர்த்துள்ளார். இதனால் அவர் விரைவில் திமுகவில் இணையக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. கட்சி மாநாட்டை அவர் புறக்கணித்துள்ளதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன, அவரது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை என்ன என்பது குறித்து அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.