தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பாதுகாப்பு இன்மை மற்றும் வரலாறு காணாத விலைவாசி உயர்வு நிலவுவதாகக் கூறி, தவெக அரசை கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"நிர்வாகத் திறன் இல்லாத சோப்ளாங்கி அரசு"
தவெக அரசை கடுமையான சாடிய மு.க.ஸ்டாலின், "நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு மூடர் கூடத்தின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தவெக அரசு, சொந்த புத்தியும் இல்லாத சொல் புத்தியும் இல்லாத ஒரு சோப்ளாங்கி அரசு. எந்தவொரு திட்டமிடலும் தொலைநோக்குப் பார்வையும் இல்லாத காரணத்தினால்தான், இந்தியாவில் எந்த மாநிலமும் வாங்காத அளவுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டனார்.
"குற்றவாளிகளின் கொண்டாட்டமாக மாறிய ஆட்சி"
மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், பட்டப்பகலில் முக்கியச் சாலைகளிலும், நீதிமன்ற வளாக எதிரிலும் கொலைகள் நடப்பதாகக் குற்றம் சாட்டினார். சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடுவதை சுட்டிக்காட்டிய அவர், குற்றவாளிகளுக்கு அரசு மீது பயமில்லாமல், தங்களுக்கான ஆட்சியாக இதனைக் கொண்டாடுவதாகத் தெரிவித்தார். மேலும், பெரும்பாலான குற்றச் சம்பவங்களில் தவெகவினரே சம்பந்தப்பட்டிருப்பதாகவும், கட்சியினரைக் கட்டுப்படுத்தினாலே பாதியளவு குற்றங்கள் குறையும் என்றும் குறிப்பிட்டார்.
எல்லாவற்றிற்கும் திமுகவே காரணமா?
முதலமைச்சர் தனது கடமையைச் சரியாகச் செய்யாமல், யாராலும் அணுக முடியாத வகையில் சினிமா படப்பிடிப்பு கேரவனில் இருப்பது போல இருப்பதாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்து வருவதாகவும், ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன பின்னரும் எல்லாவற்றிற்கும் திமுகவே காரணம் எனக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
மாநில தழுவிய போராட்டம்
விலைவாசி உயர்வு, ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காத நிலை மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றைக் கண்டித்து, நாளை (அக்டோபர் 31) திமுக மகளிரணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது வீடியோவில் அறிவித்துள்ளார்.