இந்தியா

விஜய் - சாயோனி கோஷ் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

By Sumalekha
02 Sep 2026, 02:42 AM
முதலமைச்சர் விஜய் மற்றும் திரிணாமுல் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் இருவரின் சந்திப்பு, தற்போதுள்ள அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.யான சாயோனி கோஷ், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளார். முதலமைச்சர் விஜய்யை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள சாயோனி கோஷ், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து விஜய் கொண்டுள்ள தொலைநோக்கு பார்வையை பாராட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து விஜய் பகிர்ந்த கருத்துகள் :

இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதை, மக்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் விஜய் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக சாயோனி கோஷ் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்தை மையமாக கொண்டு செயல்படும் விஜய்யின் அணுகுமுறை பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க கலாச்சாரம் குறித்து விஜய் :

சந்திப்பின்போது மேற்கு வங்க மாநிலத்தின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் அன்புடன் பேசியதாக சாயோனி கோஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களின் கலாச்சார பெருமைகள் குறித்தும் இருவரும் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

எக்ஸ் தளத்தில் சாயோனி கோஷ் வெளியிட்ட பதிவு :

இந்த சந்திப்பு குறித்து சாயோனி கோஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், தமிழ்நாடு மற்றும் அதன் எதிர்காலம் குறித்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் நல்லாட்சியை அடிப்படையாக கொண்ட தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார் என தெரிவித்துள்ளார். 

மேலும், மேற்கு வங்கத்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான தனது அன்பையும் அவர் வெளிப்படுத்தினார் என்று கூறிய சாயோனி கோஷ், விஜய்யின் அன்பான வரவேற்புக்கு நன்றி மற்றும் தமிழ்நாட்டுக்கான தனது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் முயற்சிகளுக்கு தனது வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த சாயோனி கோஷ் :

நடிகையும் பாடகியுமான சாயோனி கோஷ், கடந்த 2021-ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் ஆசன்சோல் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் அக்னிமித்ரா பாலிடம் தோல்வியை சந்தித்தாலும், பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணியின் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி :

2024 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட சாயோனி கோஷ், 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

ஒரு காலத்தில் திரிணாமுல் தலைமையின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட அவர், பின்னர் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிருப்தி அணியில் இணைந்ததாக கூறப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகல் :

மேற்கு வங்க அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து, சாயோனி கோஷ் உள்ளிட்ட சில அதிருப்தி தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர்.

இதையடுத்து அவர் தற்போது ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ (NCPI) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார்.

மேற்கு வங்க அரசியலில் தொடரும் பரபரப்பு :

நீண்ட காலமாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சமீபத்திய அரசியல் மாற்றங்களால் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், தலைவர்களின் விலகல் மற்றும் புதிய அரசியல் அணிகளின் உருவாக்கம் ஆகியவை மேற்கு வங்க அரசியல் களத்தில் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளன.