இந்தியா

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதே ஒரே வழி- CJP திட்டவட்டம்!

By Christon
24 Jul 2026, 03:41 PM
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

டெல்லியில் இன்று பிற்பகல் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய அரசு சார்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர். காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் அதன் தேசிய செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்வி அமைச்சரின் ராஜினாமா கோரிக்கை குறித்து முடிவெடுக்க நாளை (ஜூலை 25) பிற்பகல் வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதாகக் காக்ரோச் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இக்கூட்டம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, "சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவர்கள் 3 முக்கியக் கோரிக்கைகளையும் தேர்வுகள் தொடர்பான 5 சீர்திருத்தப் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். இது குறித்து அரசுக்குள் ஆலோசித்துவிட்டு நாளை பிற்பகல் மீண்டும் சந்திக்க உள்ளோம்" எனக் கூறினார்.

முன்னதாகப் பேசிய காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைத் தவிர வேறு எதிலும் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், போராட்டத்திற்குத் தீர்வு காண தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதே ஒரே வழி என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனிடையே, முக்கியக் கோரிக்கைகள் குறித்து அரசு அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து, 26 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தைச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நேற்று இரவோடு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.