பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23-வது இந்தியா – ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு இந்தியாவின் பாரம்பரியக் கலை மற்றும் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையிலான நினைவுப் பரிசுகளை வழங்கியுள்ளார்.
ராஜஸ்தானின் நீல மட்பாண்டம் முதல் காஷ்மீரின் பஷ்மினா சால்வை வரை, தமிழ்நாட்டின் சோழர் கால வெண்கலச் சிற்பம் முதல் குஜராத்தின் ரோகன் ஓவியம் வரை பல்வேறு மாநிலங்களின் தனித்துவமான கைவினைப் பொருட்கள் இந்தப் பரிசுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பரிசுப் பொருளுக்கும் பின்னால் பல நூற்றாண்டுகள் பழமையான கலை மரபும், கைவினைக் கலைஞர்களின் உழைப்பும் அடங்கியுள்ளன. உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள் குறித்த சுவாரசியமான தகவல்கள் இதோ...
எந்த நாட்டுக்கு என்ன பரிசு?
1. ஆஸ்திரேலியா – ஜெய்ப்பூர் நீல மட்பாண்டம்!
ராஜஸ்தானின் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் ப்ளூ பாட்டரி கைவினைப் பொருளை ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி பரிசளித்துள்ளார். களிமண்ணுக்குப் பதிலாக குவார்ட்ஸ் கலவையால் உருவாக்கப்படும் இந்தப் பொருட்களில் வெள்ளைப் பின்னணியில் நீல நிற மலர்கள், பறவைகள் மற்றும் நுணுக்கமான அலங்காரங்கள் இடம்பெறும்.
2. ஜப்பான் – ராயல் ப்ளூ பனாரஸ் பட்டுத் துணி!
ஜப்பான் பிரதமருக்கு ராயல் ப்ளூ நிற பனாரஸ் கதான் பட்டுத் துணியை அழகிய சதெலி பெட்டியில் வைத்து வழங்கியுள்ளார். வாரணாசியின் பல நூற்றாண்டுகள் பழமையான நெசவுக் கலையில் உருவாகும் இந்தப் பட்டுத் துணி, நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கும் மென்மைக்கும் புகழ்பெற்றது.
3. அமெரிக்கா – தங்க நிற பிச்சுவாய் ஓவியம்!
அமெரிக்க அதிபருக்கு ராஜஸ்தானின் நாத்வாரா பகுதியில் உருவாகும் தங்க நிற பிச்சுவாய் ஓவியம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. துணியில் இயற்கை நிறமிகள் மற்றும் தங்க வேலைப்பாடுகளைக் கொண்டு வரையப்படும் இதில் தாமரை, பசுக்கள், மரங்கள் போன்ற பாரம்பரிய உருவங்கள் இடம்பெறும்.
4. வியட்நாம் – தோல் சுவர் அலங்காரம்!
வியட்நாம் பிரதமருக்கு இந்தியாவின் பாரம்பரிய தோல் கைவினைப் பொருளான சுவர் அலங்காரம் வழங்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட தோலில் துளையிடுதல், புடைப்பு வேலைப்பாடுகள் மற்றும் வண்ண ஓவியங்கள் மூலம் மலர்கள், விலங்குகள் உள்ளிட்ட வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன.
5. திமோர்-லெஸ்தே – அகேட் கல் கிண்ணம்!
திமோர்-லெஸ்தே பிரதமருக்கு குஜராத்தின் கம்பாட் பகுதியில் புகழ்பெற்ற அகேட் கல்லால் செய்யப்பட்ட கிண்ணம் வழங்கப்பட்டுள்ளது. இயற்கையான வண்ணக் கோடுகளைக் கொண்ட அரிய வகைக் கல்லைச் செதுக்கி, மெருகூட்டி உருவாக்கப்படும் இந்தப் பொருள் ஒவ்வொன்றும் தனித்துவமானது.
6. பிலிப்பைன்ஸ் – பஷ்மினா சால்வை!
பிலிப்பைன்ஸ் அதிபரின் மனைவிக்கு காஷ்மீரின் புகழ்பெற்ற பஷ்மினா சால்வையைப் பாரம்பரிய காகிதக் கூழ் பெட்டியில் வைத்து மோடி பரிசளித்துள்ளார். சாங்க்தாங்கி ஆட்டின் மென்மையான கம்பளி இழைகளால் தயாரிக்கப்படும் இந்தச் சால்வை, குறைந்த எடை மற்றும் அதிக மென்மைக்குப் பெயர்பெற்றது. பெட்டியில் காஷ்மீரின் பாரம்பரிய மலர் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
7. தாய்லாந்து – ரோகன் கலை ஓவியம்!
தாய்லாந்து பிரதமருக்கு குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய ரோகன் ஓவியம் வழங்கப்பட்டுள்ளது. ஆமணக்கு எண்ணெய் மற்றும் இயற்கை நிறமிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் அடர்த்தியான வண்ணக் கலவையைப் பயன்படுத்தி, உலோகக் கம்பி மூலம் துணியில் நுணுக்கமான வடிவங்கள் வரைவது இதன் சிறப்பாகும்.
8. பிலிப்பைன்ஸ் – காஷ்மீர் பட்டுக் கம்பளம்!
பிலிப்பைன்ஸ் அதிபருக்கு காஷ்மீரின் கையால் முடிச்சிடப்பட்ட பட்டுக் கம்பளம் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான முடிச்சுகளைக் கொண்டு உருவாக்கப்படும் இந்தக் கம்பளங்களில் மலர்கள், சினார் இலைகள் மற்றும் வடிவியல் அலங்காரங்கள் இடம்பெற்று காஷ்மீரின் இயற்கை அழகைப் பிரதிபலிக்கின்றன.
9. சிங்கப்பூர் – கோண்ட் ஓவியம்!
சிங்கப்பூர் பிரதமருக்கு மத்திய இந்தியாவின் கோண்ட் பழங்குடியின மக்களின் பாரம்பரிய ஓவியம் வழங்கப்பட்டுள்ளது. புள்ளிகள், கோடுகள் மற்றும் வண்ணங்களைக் கொண்டு மரங்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் இயற்கைக் காட்சிகளை வரைவது இந்தக் கலையின் தனிச்சிறப்பாகும்.
10. புருனே – பித்ரிவேர் வெள்ளிப் பூஜாடி!
புருனே சுல்தானுக்கு கர்நாடகாவின் பீதர் பகுதியில் தயாரிக்கப்படும் பித்ரிவேர் வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட பூஜாடி வழங்கப்பட்டுள்ளது. துத்தநாகம் மற்றும் தாமிரக் கலவையால் உருவாக்கப்பட்ட பொருளின் மீது தூய வெள்ளியைப் பதித்து, அடர் கருப்பு நிறப் பின்னணியில் அழகிய வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன.
11. மலேசியா – வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட உருளி!
மலேசிய பிரதமருக்கு வெள்ளி அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட பாரம்பரிய உருளி பரிசளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் நிரப்பி மலர்களை மிதக்கவிட்டு அலங்கரிக்கப் பயன்படும் உருளி, இந்தியப் பண்பாட்டில் விருந்தோம்பல், செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
12. இந்தோனேசியா – சோழர் கால வெண்கலச் சிற்பம்!
இந்தோனேசிய அதிபருக்கு தமிழ்நாட்டின் சோழர் கால வெண்கலச் சிற்பம் வழங்கப்பட்டுள்ளது. 9 முதல் 13-ம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்றிருந்த சோழர் சிற்பக் கலையில், மெழுகு அச்சு முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு சிற்பமும் தனித்தனியாக உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
13. லாவோஸ் – தங்க வேலைப்பாடுகள் கொண்ட யானை!
லாவோஸ் பிரதமருக்கு ரோஸ் குவார்ட்ஸ் எனப்படும் இளஞ்சிவப்பு நிறக் கல்லால் செதுக்கப்பட்ட யானைச் சிற்பம் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் கல் செதுக்கும் கைவினை மரபில் உருவாக்கப்பட்ட இந்த யானையில் தங்க நிற மலர் வடிவங்கள் மற்றும் பாரம்பரிய அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
14. மியான்மர் – பித்ரிவேர் வெள்ளிப் பூஜாடி!
மியான்மருக்கு கர்நாடகாவின் பீதர் பகுதியில் உருவாகும் பித்ரிவேர் வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட பூஜாடி வழங்கப்பட்டுள்ளது. அடர் கருப்பு நிற உலோகத்தின் மீது வெள்ளிக் கம்பிகளைப் பதித்து உருவாக்கப்படும் மலர் மற்றும் வடிவியல் அலங்காரங்கள் இதன் முக்கியச் சிறப்பாகும்.
15. கம்போடியா – டோக்ரா படகுச் சிற்பம்!
கம்போடியாவுக்கு இந்தியாவின் பழமையான டோக்ரா உலோகக் கைவினைக் கலையில் உருவாக்கப்பட்ட படகுச் சிற்பம் பரிசளிக்கப்பட்டுள்ளது. மெழுகு அச்சு முறையில் உருவாக்கப்படும் இந்தச் சிற்பத்தில் படகு, மனித உருவங்கள் மற்றும் பறவைகள் இடம்பெற்று ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முன்னேற்றத்தை அடையாளப்படுத்துகின்றன.
பரிசுப் பொருட்களில் மிளிர்ந்த இந்தியப் பாரம்பரியம்!
இந்தப் பரிசுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பொருளும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களின் கலை அடையாளத்தையும், கைவினைக் கலைஞர்களின் திறமையையும் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டின் சோழர் கால வெண்கலச் சிற்பம் இடம்பெற்றிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
வெறும் நினைவுப் பரிசுகளாக மட்டுமின்றி, இந்தியாவின் பாரம்பரியத் தொழில்கள், கலை மரபுகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் இவை அமைந்துள்ளன. இந்தப் பரிசுகள் தொடர்பான புகைப்படங்களும் தகவல்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.