இந்தியா

உயிருடன் இருக்கும் சுகுமார குரூப்? 42 ஆண்டுகாலக் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

By Christon
27 Aug 2026, 09:06 PM
கேரள காவல்துறையால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவுக் குற்றவாளியான சுகுமார குரூப், புரூனை நாட்டில் உயிரோடு இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள காவல்துறையால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவுக் குற்றவாளியான சுகுமார குரூப், புரூனை நாட்டில் உயிரோடு இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள ஒரு நபரின் தோற்றம் சுகுமார குரூப்பை ஒத்து இருப்பதால், அவர் குறித்த சந்தேகங்கள் மீண்டும் வலுத்துள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான புரூனையில், அங்குள்ள இந்திய மற்றும் மலையாளி சமூகத்தினரிடமிருந்து விலகி, போலி அடையாளத்துடன் சுகுமார குரூப் தனித்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் உள்ள தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அவர் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரூப்பின் உறவினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்த சைபர் நிபுணர் ஒருவர், 2023-ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையில் ஆய்வைத் தொடங்கியுள்ளார். புரூனையில் உள்ள மலையாளிகளின் உதவியுடன் அந்த முதியவரைக் கண்காணித்து, அவர் வசிக்கும் இடத்தையும் கண்டறிந்து படம்பிடித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மலேசிய-புரூனை எல்லைக்கு அருகில் உள்ள சிம்பாங் பகுதியில், கட்டுமான தொழில் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள அவர், தற்போது சட்டவிரோதமாகத் தங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அவரது பாஸ்போர்ட் காலாவதியான நிலையில், போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட மற்றொரு பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், மத்திய உளவு அமைப்புகளின் அறிவியல் பூர்வ பரிசோதனைக்கு பிறகே அவர் உண்மையிலேயே சுகுமார குரூப்பா என்பது உறுதி செய்யப்படும்.

இன்சூரன்ஸ் பணத்தைக் கைப்பற்றுவதற்காகச் சாக்கோ என்பவரைக் கொலை செய்த வழக்கில், கோபாலகிருஷ்ண குரூப் என்ற சுகுமார குரூப் 1984-ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வருகிறார். மும்பை, டெல்லி, பீகார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலி பெயர்களில் தலைமறைவாக இருந்த அவரைப் பிடிக்கக் கேரளா போலீஸ் தீவிர முயற்சி மேற்கொண்டது.

அவர் இறந்துவிட்டதாகக் கருதி 42 ஆண்டுகால விசாரணையை முடிக்கக் கேரளா காவல்துறை ஆயத்தமாகி வந்த வேளையில், இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டு இவரது உண்மைச் சம்பவத்தைத் தழுவி, துல்கர் சல்மான் நடிப்பில் 'குருப்' (KURUP) திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.