இந்தியா

PUBG கேமால் வந்த வினை! 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொடூரத் தாக்குதல்!

By Christon
05 Nov 2026, 06:31 PM
அரியானா பள்ளியில் 6 வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, 8 வயது சிறுவன் வன்முறை நிறைந்த ஆன்லைன் கேம்களுக்கு அடிமையானதே காரணம் என தெரியவந்துள்ளது.

அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அரசுப் பள்ளியில் 6 வயது சிறுமியை 8 வயது சிறுவன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அச்சிறுவன் வன்முறை நிறைந்த செல்போன் கேம்களுக்கு அடிமையாகியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவனின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மன்பீர் சிங் ரதி தெரிவிக்கையில், "சிறுவனிடம் நடத்திய விசாரணையில், அவன் செல்போனில் அதிக வன்முறை நிறைந்த விளையாட்டுகளை விளையாடி வந்தது தெரியவந்தது. இந்த கேம்களில் மெய்நிகர் (Virtual) கதாபாத்திரங்களைத் தாக்கும் போது புள்ளிகள் கிடைக்கும். எந்தளவுக்கு அதிகமாகத் தாக்குகிறார்களோ, அந்தளவுக்கு புள்ளிகள் அதிகரிக்கும். இதனால் சிறுவர்கள் நிஜ வாழ்க்கைக்கும் கேமிங் உலகிற்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது" என்று கவலை தெரிவித்தார்.

மேலும், பப்ஜி (PUBG) போன்ற வன்முறை கேம்களைச் சிறுவன் தொடர்ச்சியாக விளையாடி வந்ததைச் சிறுவனின் தந்தையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் சிறுவனுக்குப் பூர்விகக் குற்றப்பின்னணி எதுவும் இல்லாததாலும், தொடர்ந்து கூர்நோக்கு இல்லத்தில் வைப்பது அவனது கல்வி மற்றும் மன வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதாலும், சிறுவர் நீதி வாரியம் அச்சிறுவனை விடுவித்துள்ளது. சிறுவனுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கி, நடத்தையைச் சீர்திருத்துவதாக அவனது பெற்றோர் உறுதியளித்துள்ளனர்.

சிறுவர் நீதிச் சட்டம் பிரிவு 74-ன் கீழ், சமூக வலைதளங்களில் சிறுவனின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் பரவி வரும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் தகவல்களை உடனடியாக நீக்க வேண்டும் எனச் சிறுவர் நீதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை நவம்பர் 27-க்குள் தாக்கல் செய்யுமாறு புலனாய்வு அதிகாரியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த அக்டோபர் 28 அன்று பஞ்ச்குலாவில் உள்ள அரசுப் பள்ளியில், 3-ஆம் வகுப்பு படிக்கும் இந்த 8 வயது சிறுவன், எல்.கே.ஜி படிக்கும் 6 வயது சிறுமியை வகுப்பறைக்குள் செங்கலால் தலையில் தாக்கியும், பெஞ்சில் மோதியும், டை-யைப் பிடித்து இழுத்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த சிறுமி, சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பியுள்ளார்.