இந்தியா

பூந்தொட்டியால் தாக்கி தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட சிறுமி.. 3-ம் வகுப்பு மாணவன் கொடூரம்!

By Christon
31 Oct 2026, 01:31 PM
எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருவர், அதே பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள சமஸ்கிருதி மாடல் பள்ளியில், எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருவர், அதே பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரத் தாக்குதல்

பள்ளி வளாகத்திற்குள் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அந்த மாணவன் சிறுமியை முதலில் கற்களால் தாக்கியுள்ளான். பின்னர் அங்கு இருந்த பூந்தொட்டியை எடுத்துச் சிறுமியின் தலையில் பலமாக அடித்துள்ளான். தாக்குதலில் சிறுமி மயக்கமடைந்த பின்னரும், அவளது முடியைப் பிடித்து பள்ளி வளாகத்திற்குள் தரதரவென இழுத்துச் சென்றுள்ளான். இந்தத் தாக்குதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

ICU-வில் சிறுமி

தாக்குதலுக்கு உள்ளான சிறுமி உடனடியாக செக்டார் 6-இல் உள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகச் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (PGIMER) அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறை விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தாக்குதல் நடந்த சூழல் குறித்துப் பள்ளி நிர்வாகத்திடமும், மாணவனின் பெற்றோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைகள் குறித்து இந்தச் சம்பவம் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.