இந்தியா

கர்நாடக அரசியலில் அதிரடி மாற்றம்.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா!

By Christon
28 May 2026, 11:25 AM
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம், அவருக்கும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வந்த தலைமைப் போட்டி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற காலை உணவு கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 48 மணி நேரமாக டெல்லியில் காங்கிரஸ் மேலிடத்துடன் நடைபெற்ற ரகசிய ஆலோசனைகள் மற்றும் தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சித்தராமையா தனது பதவியை விட்டுக்கொடுக்க சம்மதித்ததற்காக, அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி பதவியும், அவரது மகன் யதீந்திராவுக்கு அமைச்சர் பதவியும் வழங்குவதாகக் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது முதலே சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்களிடையே முதல்வர் நாற்காலிக்கான மறைமுகப் போட்டி நீடித்து வந்தது. இந்த உட்கட்சிப் பூசல் கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில அரசைப் பல்வேறு வழிகளில் பாதித்து வந்த சூழலில், காங்கிரஸ் மேலிடத்தின் சமாதான முயற்சிக்குப் பிறகு தற்போது சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நாளை கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.