இந்திய இளைஞர்களைப் பற்றிய தலைமை நீதிபதி சூர்யா காந்தின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே தலைமையில் நையாண்டி பாணியில் தொடங்கப்பட்ட அமைப்புதான் ‘கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’. வேலையின்மை, ஊழல், தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து இந்த அமைப்பு தொடர்ந்து சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வந்தது.
குறிப்பாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டத் தொடங்கியது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூன் 6-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 7,000 பேர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அபிஜீத் தீப்கே, “தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்” என்று அறிவித்தார். இதையடுத்து பெங்களூரு, புனே, லக்னோ உள்ளிட்ட நகரங்களிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தின் போது அபிஜீத் தீப்கேவை அவரது ஆதரவாளர்கள் தோளில் தூக்கிச் சென்றனர்.
அப்போது கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அபிஜீத் தீப்கேவின் கன்னத்தில் அறைந்ததார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய நபர் யார், அவரது நோக்கம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.