இந்தியா

காலிமனையில் கிடந்த சடலம்.. கொலையாளியை காட்டிக்கொடுத்த DRESS TAG!

By Christon
27 Sep 2026, 10:30 AM
பெங்களுருவில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆடையில் இருந்த 'டேக்' மூலம் கொலையாளியைக் காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் வழக்கம்போல் காலியிடங்களைச் சுத்தம் செய்யச் சென்ற இடத்தில் பேரதிர்ச்சி காத்திருந்தது. அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலத்தின் பின்னணியில் அரங்கேறிய கொடூரக் கொலையும், அதைத் தொடர்ந்து நடந்த சினிமா பாணி திருப்பங்களும் பெங்களூருவையே உலுக்கியுள்ளன.

காதல் திருமணம்... பணத் தகராறு... கொடூர முடிவு!

பீகாரைச் சேர்ந்த சாகர் சந்திர ராவத் (32) என்பவரும், அனசுயா பெஹராவும் (28) தீவிரமாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். பிழைப்பு தேடி சில மாதங்களுக்கு முன்புதான் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தனர். சாகர் ஓட்டலிலும், அனசுயா துணிக்கடையிலும் வேலை பார்த்து வந்த நிலையில், தம்பதிக்கு இடையே பணப் பிரச்னை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 11 அன்று மூண்ட கடுமையான வாக்குவாதத்தில், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சாகர், அனசுயாவைத் கொடூரமாகத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

சடலத்தோடு 3 நாட்கள்...

கொலைக்குப் பிறகும் சாகரின் கொடூரம் குறையவில்லை. மனைவியின் உடலைத் தனது வீட்டிலேயே வைத்துக்கொண்டு 3 நாட்கள் வழக்கம்போல் வாழ்ந்துள்ளார். பின்னர், உடலைப் போர்வையால் சுற்றி, ஒரு மெத்தையில் பொதிந்து இரவோடு இரவாகச் சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள காலியிடத்தில் வீசியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சடலத்தை யாராவது கண்டுபிடித்து விட்டார்களா என்பதைச் சரிபார்க்க, தினமும் அந்த இடத்திற்கு நேரில் சென்று நோட்டமிட்டு வந்துள்ளார்.

'டேக்' கொடுத்த க்ளூ!: சிக்கியது எப்படி?

செப்டம்பர் 2 அன்று மாநகராட்சி ஊழியர்கள் காலியிடத்தைச் சுத்தம் செய்தபோதுதான் அழுகிய நிலையில் இருந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அதற்குள் தெரு நாய்கள் உடலின் சில பகுதிகளைக் கடித்துக் குதறியிருந்ததால், சடலத்தை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

அப்போதுதான், உடலின் ஆடையில் இருந்த சிறிய 'டேக்' (Tag) காவல்துறையினருக்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த டேக்கை வைத்து ஆடை வாங்கப்பட்ட மால் வரை சென்று, கொலையானது அனசுயா தான் என்பதைத் துப்பறிந்து கண்டுபிடித்தனர்.

மனைவியைக் கொன்று வீசிவிட்டும், ஒன்றும் தெரியாதது போல் வழக்கம்போல் ஓட்டலுக்கு வேலைக்குச் சென்று வந்த சாகரைப் பிடித்துக் காவலாளர்கள் பாணியில் விசாரித்ததில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சம்பிகேஹள்ளி காவல்துறையினர் அவரைத் தூக்கி சிறையில் அடைத்தனர்.