இந்தியா

பூங்காவில் மகிழ்ச்சியாக விளையாடிய சிறுமி.. பக்கத்து வீட்டுக்காரரால் நேர்ந்த கொடூரம்!

By Christon
08 Aug 2026, 12:57 PM
பூங்காவிற்குச் சென்ற 8 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள பதாம்பூர் பகுதியில், பூங்காவிற்குச் சென்ற 8 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 5 ஆம் தேதி பிற்பகல் வேளையில், சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாடச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அச்சிறுமி பூங்காவில் மயங்கிய நிலையில் கிடப்பதாக உறவினர் ஒருவர் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த குடும்பத்தினர், சிறுமியை மீட்டு உள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீ கங்காநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துச் சிறுமியின் தாய் அளித்துள்ள புகாரில், தனது மகளுக்கு போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த நபரே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் பதாம்பூர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய பாஜக அரசு முற்றிலும் தோற்றுவிட்டதா அவர் தெரிவித்தார்.