பிரிக்க முடியாதது என்னவோ?' என்று இக்காலத்தில் தருமி கேட்டிருந்தால், 'கோடம்பாக்கமும் கோட்டையும்' என்று பதில் சொல்லியிருப்பார், கூத்தன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அப்படிப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்குமான பந்தம். நூற்றாண்டுகளைக் கடந்தும் இது தொடரும் என்பதையே உணர்த்துகின்றன தற்போதைய அரசியல் சூழல்கள்."
அறுபதுகளின் தொடக்கத்தில் லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்த போது, நாடே வாய்பிளந்தது. அன்றைக்கு அது ஆச்சரியமாக இருந்தது. இன்றைக்கோ, சினிமாக்காரர்கள் இல்லாமல் அரசியல் இல்லை என்றாகிவிட்டது. சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது அபத்தம் என்று சினிமாவுக்குள் இருந்தே பாரதிராஜாவும், பாலு மகேந்திராவும் எதிர்க்குரல் எழுப்பினாலும்கூட, பொழுது போக்கும் பொதுவாழ்க்கையும் ஒன்றுதான் என்று பொது மக்களே ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
பாயின்ட் டூ பாயின்ட் பஸ் சர்வீஸ் போல, கோடம்பாக்கத்தில் இருந்து நேராக இப்போது கோட்டைக்குச் சென்றுவிட்டார், விஜய். இவருக்கு வாய்த்ததுபோல் இதுவரையிலும் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. ஏகப்பட்ட இடை நிறுத்தங்களில் நின்று, பல சிக்கல்களையும், சவால்களையும் சந்தித்துதான் சென்றது அந்த பஸ். அதை எல்லாம் கடந்துதான் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோட்டைக்குச் சென்றார்கள்.
இடைநிறுத்தச் சிக்கல்களிலேயே சிவாஜி கணேசன், பாக்யராஜ், சரத்குமார் கட்சியைக் கலைத்தார்கள். டி.ராஜேந்தரும், நவரச நாயகன் கார்த்திக்கும் இன்னமும் விடாப் பிடியாக இருக்கிறார்கள். தே.மு.தி.க.வை ஆரம்பித்து எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அளவுக்கும் போனார், விஜயகாந்த். அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்த கமல்ஹாசன் கூட, திடீர் விஜயம் செய்தார். அவரின் தடுமாற்றம் ரஜினியையும் பின்வாங்க வைத்துவிட்டது.
'சோ' மூலமாக வந்த அழைப்பை ஏற்று அன்றைக்கு ஜெயலலிதாவிடம் 'ஓகே' சொல்லி இருந்தால், அவருக்குப் பின் முதல்வராகியிருப்பார் அஜித். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுடன் விஷாலின் அரசியல், எழுச்சி பெறாமல் இருக்கிறது. இதை எல்லாம் வைத்துத்தான் ஆரம்பத்திலிருந்தே, 'நடிகன் இனி நாடாள முடியாது' என்று நடிகர் சத்யராஜ் உரத்த குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார்.
அது அவ்வளவு சுலபமல்ல என்று பலரும் தயங்கிக்கொண்டிருந்த நிலையில்தான், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று ஒரு பட்டாளத்தையே புறப்பட வைத்துவிட்டது விஜய்க்குக் கிடைத்த ரிசல்ட்! தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்று அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், 'வேலையில்லா பட்டதாரியே அரசியலுக்கு வந்துட்டார்' என்று தனுஷின் அரசியல் வருகையை உறுதி செய்தார், கனிமொழி எம்.பி. இதன் பின்னர் கட்சிப் பெயரை டெல்லியில் பதிவு செய்துவிட்டார் என்கிற அளவுக்கு தனுஷின் அரசியல் வேகமெடுத்திருக்கும் நிலையில், தனுஷ் ரசிகர் மன்றத் தலைவரும் இயக்குநருமான சுப்பிரமணியம் சிவாவிடம் அது குறித்துக் கேட்கலாம் என்று போன் செய்தால், 'ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்' என்ற காலர் டியூன் ஒலிக்கிறது.
சரிதான்... செம்ம ஃபார்மில்தான் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும், “டெல்லியில் பதிவு பண்ணின கட்சி பேரு தமிழக எழுச்சிக் கழகம்தானே சார்? TVK மாதிரி TEK தானே சார்?” என்று கேட்டால், “கட்சிப் பேரு என்னன்னு இன்னும் பதிவு செய்யலையே?” என்கிறார். "பதிவு பண்ணிட்டதா செய்தி பரவுதே?” என்று கேட்டதற்கு, "அதுக்கேத்த வேலைகள் நடந்துட்டு இருக்கு. அதனால செய்தி பரவும்தானே?” என்றார். “2031 சட்டமன்றத் தேர்தல்தான் தனுஷின் இலக்கா?" என்றால், “அதை சார்தான் சொல்லுவார்” என்று நழுவினார். அதற்கு மேல் பேசலாம் என்று பார்த்தால், "மத்தத சார் சொல்லுவார். அவர் சொல்லும்போது அது தலைப்புச் செய்தியா வரும். இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க” என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.
தனுஷுக்குப் போட்டியாக சிம்பு வந்து நிற்பார் என்று பார்த்தால், சிவகார்த்திகேயன் தயாராகி வந்து நிற்கிறார். மாநாடு மாதிரி மன்ற நிர்வாகிகளை வைத்துக் கூட்டம் நடத்திவிட்டார். தனுஷுக்கு சுப்பிரமணியம் சிவா மாதிரி, சிவகார்த்திகேயனுக்கு மோகன்தாஸ் வேலை செய்துகொண்டிருக்கிறார்.
தி.மு.க-வின் வாக்கு வங்கியில் இருந்த பட்டியலின சமூக வாக்குகளை எல்லாம் விஜய் மொத்தமாக அபகரித்து விட்டார் என்பதால், அவற்றை மீட்டெடுக்கும் விதமாகத்தான் தனுஷை உதயநிதி களமிறக்குகிறார் என்றும், 2031 தேர்தலில் உதயநிதியும் தனுஷம் இணைந்து களம் காண இருக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் பரவி வந்த நிலையில், அதுதான் உண்மையாக இருக்குமோ என்று நினைத்தால், தனுஷின் பின்னால் பா.ஜ.க. இருக்கிறது என்று வேறொரு தகவலும் பரவுகிறது.
சூர்யாவின் பின்னாலும் தி.மு.க. இருக்கிறது என்கிறார்கள். சூர்யாவின் அரசியல் என்ட்ரியில் சத்யராஜ்தான் அதிகம் மெனக்கிட்டு வருகிறாராம். சூர்யா மூலம் கொங்கு மண்டலத்தில் தங்கள் சமுதாய வாக்குகளை பலப்படுத்தி, தி.மு.கவை அங்கே வலிமை அடையச் செய்யலாம் என்று கணக்குப் போட்டுத்தான் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறாராம் சத்யராஜ். விஜய் சேதுபதியும் தனது மன்றங்களைப் பலப்படுத்த ஆரம்பித்துவிட்டார். சிம்பு, ஜெயம் ரவி என்று லிஸ்ட் நீள்கிறது.
பெரும்பாலான மாநிலங்களில் கூட்டணி ஆட்சியே நடந்து வரும் நிலையில், தமிழகத்தின் எதிர்காலமும் கூட்டணி ஆட்சியை நோக்கியே நகர்கிறது. இதைப் புரிந்துகொண்டு, எவரும் இனி தனித்து வர முடியாது என்று தெரிந்ததால், எப்படியும் கூட்டணி ஆட்சியில் பங்கு பெறலாம் என்கிற நப்பாசையில்தான் நடிகர்கள் இப்படிப் புற்றீசல் போல் அரசியலுக்குப் புறப்பட்டு வருவதாகத் தெரிகிறது.