பெங்களூரு: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரு ஐடி நிறுவனங்களுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள ஐடி நிறுவனங்களின் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இது தவிர பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் நிறைந்துள்ளன. இதிலும் கன்னடர்கள் மட்டுமின்றி வட இந்தியாவை சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறை பணியிடங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இடஒதுக்கீடு மசோதாவை கர்நாடக அரசு கொண்டு வர உள்ளதாக அறிவித்தது. அதாவது கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவன பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதாவை கொண்டு வர உள்ளதாகவும் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இது நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. கர்நாடக மாநிலத்தில் பிறந்து 15 ஆண்டுகள் அந்த மாநிலத்தில் வசிப்பவர்கள், கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்தவர்கள் இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என்று இந்த மசோதா கூறுகிறது.
மேலும் தனியார் நிறுவனங்களில் தகுதியான அல்லது பொருத்தமான உள்ளூர் நபர்கள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அரசுடன் இணைந்து உள்ளூர் நபர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் இந்த மசோதா தெளிவாக குறிப்பிடுகிறது.
இதன்பிறகு தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வழங்கும் மசோதாவுக்கு மாநிலம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்போசிஸ், மணிபால், பயோகான் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி, மற்ற தொழில் நிறுவனங்களும், ''கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள மசோதா அரசியலமைப்பு எதிரானது. சட்டத்தை மீறிய செயல். இதனை உடனே திரும்ப வேண்டும்'' என போர்க்கொடி உயர்த்தின.
மேலும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தொழில்நுட்ப துறை அமைச்சருமான நாரா லோகேஷ், ''கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் தாராளமாக ஆந்திராவுக்கு வரலாம். இங்கு உங்களுக்கு இடவசதிகளை ஏற்படுத்தி தருகிறோம். உங்களுக்கு அரசு எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்காது'' என்று ஐடி நிறுவனங்களுக்கு வலை விரித்தார்.
இந்நிலையில், கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு வழங்கும் மசோதாவை நிறுத்தி வைப்பதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் முதல்வர் சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இது குறித்து வரும் நாட்களில் மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.