இந்தியா

இந்தியா- கத்தார் 7 ஒப்பந்தங்கள்.. பிரதமர் மோடி- அதிபர் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-கத்தார் இடையே கையெழுத்தான ஏழு ஒப்பந்தங்களின் ஆவணங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தார் அதிபர் முன்னிலையில் பரிமாறப்பட்டது.

இந்தியா- கத்தார் 7 ஒப்பந்தங்கள்.. பிரதமர் மோடி- அதிபர் முன்னிலையில் கையொப்பம்
இந்தியா- கத்தார் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்துள்ள கத்தார் அதிபரை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். பின்னர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சார்பில் அவரது மாளிகையில் கத்தார் அதிபருக்கு அரசு முறைப்படி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.

பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - கத்தார் அதிபர் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, எரிசக்தி, உணவு பாதுகாப்பு, கலாசாரம்  உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.  இந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இது தொடர்பான ஆவணங்களை கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜஸிம் அல்தானியும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தார் அதிபர் முன்பு பரிமாறிக் கொண்டனர்.

இதேபோல் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு மற்றும் நிதி முறைகேடுகள் தடுப்பு தொடர்பாக திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.  இந்த ஒப்பந்த ஆவணங்களை கத்தார் பிரதமரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும்  பரிமாறிக் கொண்டனர்.  தொடர்ந்து, பொருளாதார கூடுறவு, ஆவணக் காப்பகத்துறை  ஒத்துழைப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு உள்பட மேலும் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியா - கத்தார் இடையிலான நட்புறவும், நம்பிக்கையும், பரஸ்பர மரியாதையும் வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இரு தரப்பு நல்லுறவில் புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர். 

இறக்குமதி- ஏற்றுமதி

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு ஆகியவை கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், எத்திலீன், புரோபலீன், அமோனியா, யூரியா போன்ற பல்வேறு ரசாயனங்கள், பிளாஸ்டிக் உள்ளிட்டவையும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மசாலாப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்க, தாமிர பொருட்கள், மின் பொருட்கள், கட்டுமான பொருட்கள், ஜவுளி, மதிப்புமிக்க கற்கள், ரப்பர் உள்ளிட்டவற்றாஇ அந்நாட்டுக்கு இந்திய ஏற்றுமதி செய்கிறது.