தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை வயநாட்டில் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம். இதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள் என தெரிவித்தார்.
தற்போது, ஆட்சியில் பங்கு, அதிகாரப்பகிர்வு என்ற கருத்து எழுந்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம் என அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எங்களை பொறுத்தவரை கூட்டணி முடிவை எடுக்க வேண்டியது அகில இந்திய தலைமைதான். இப்போது நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைப்பதற்கு, சோனியா காந்தி பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்தார். அதே போல எங்களை பொறுத்தவரை தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம் என கூறினார்.
த.வெ.க தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டில் அதிகார பகிர்வு பற்றி பேசியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்றும் விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு மிகவும் இலாபகரமாக இருக்கும் எனவும் அவர் கூறினார். மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.