டெல்லி: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பணபரிவர்த்தனை தளமாக பேடிஎம் ( Paytm) உள்ளது. இதன் தாய் நிறுவனம் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ( One 97 Communications Ltd) ஆகும். பேடிஎம்மில் பணவரிவர்த்தனை மட்டுமின்றி, பேருந்து, ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி' பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் பேடிஎம் குழும நிறுவனங்கள் வெளியிட்ட ஐபிஓவில் (IPO) பொய்யான தகவல்களை கூறியதாக கூறி அதற்கு விளக்கம் கேட்டு விஜய் சேகர் சர்மாவுக்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செபி நோட்டீஸ் அனுப்பியதால் பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் இன்று அதிரடியாக வீழ்ச்சி அடைந்தன. அதாவது இந்த நிறுவனத்தின் பங்குகள் இன்று 4.48% சரிந்து ரூ.530 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேடிஎம் நிறுவனத்தின் 'பேடிஎம் பேமென்ட் வங்கி' சேவைக்கு இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக தடை விதித்தது.
`பேடிஎம் பேமென்ட் வங்கி' தனது வாடிக்கையாளர்களிடம் கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களைச் சரியாகப் பெறவில்லை என்றும் ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை எனக்கூறியும் 3 மாதங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் பேடிஎம் பேமென்ட் வங்கியின் அனைத்து தகவல்களும் தவறானதாக இருந்தது.
அதாவது 1,000 வங்கிக் கணக்குகளுக்கு ஒரு பான் கார்டு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்ததும், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததையும் ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளுக்கு கே.ஒய்.சி சமர்ப்பிக்காத பல்வேறு வாடிக்கையாளர்களின் கணக்குகளை பேடிஎம் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய டிஜிட்டல் இந்தியாவில் பெரிய வணிக வளாகங்கள் முதல் பெட்டிக்கடை வரை ஆன்லைன் பணபரிவர்த்தனை தான் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பணபரிவர்த்தனை செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் ஏராளம் பெருகி விட்டன. இதேபோல் எந்தவித ஆவணங்களும் இன்றி உடனடி லோன் (instant loan) வழங்கப்படும் எனக்கூறி ஏராளமான கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகளும் ஏராளம் உள்ளன.
ஆனால் இந்த செயலிகளில் சில ஆர்பிஐ விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகளையும் ஆர்பிஐ முழுமையாக கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.