இந்தியா

'மிஸ் இந்தியா' பட்டியலில் ஏன் தலித் இல்லை? ராகுல் காந்தி கேள்வி.. மத்திய அமைச்சர் பதிலடி!

''மிஸ் இந்தியா போட்டியாளர்களை அரசு தேர்வு செய்யவில்லை. ஒலிம்பிக்கு விளையாட்டு வீரர்களையும் அரசு தேர்வு செய்வதில்லை. இதேபோல் திரைப்பட நடிகர், நடிகைகளையும் அரசு தேர்வு செய்வதில்லை என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்'' என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார்.

'மிஸ் இந்தியா' பட்டியலில் ஏன் தலித் இல்லை? ராகுல் காந்தி கேள்வி.. மத்திய அமைச்சர் பதிலடி!
Rahul Gandhi And Kiran Rijiju

டெல்லி: காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்த 'சம்விதான் சம்மான் சம்மேளன்' மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ''இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் முக்கியம். 

நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். நான் 'மிஸ் இந்தியா' பட்டியலை பார்த்தபோது, அதில் தலித்துகள், பழங்குடியினர் அல்லது ஓபிசி பிரிவை சேர்ந்த பெண்கள் யாரும் இல்லை. ஏன் ஊடக நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் கூட 90% மேற்கண்ட பிரிவை சேர்ந்தவர்கள் இல்லை. 

சிலர் கிரிக்கெட் அல்லது பாலிவுட் சினிமாக்களை பெற்றி பேசுகிறார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளி, பிளம்பர் குறித்து யாரும் பேசுவதில்லை. எந்தெந்த அரசு அமைப்புகளில், எந்த சாதி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர்? என்று தரவுகள் எடுக்க வேண்டும். இதேபோல் நீதித்துறை, ஊடகங்களில் தலித்துகள், பழங்குடியினர் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர்? என்பது குறித்தும் தரவுகள் சேகரிக்க வேண்டியது அவசியம்'' என்று கூறி இருந்தார்.

ராகுல் காந்தியின் கருத்தை ஆமோதித்த நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். ''ராகுல் காந்தி கூறியது முற்றிலும் சரி. பல்வேறு துறைகளில் உயர் பதவியில் அடிமட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்த நிலை அதிகமாக உள்ளது'' என்று கருத்துகளை கூறினார்கள்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்துக்கு சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அவர், ''ராகுல் காந்தி இப்போது மிஸ் இந்தியா போட்டிகள், விளையாட்டு மற்றும் திரைப்படங்களில் இடஓதுக்கீடு வேண்டும் என சிறு குழந்தை போல் பேசியுள்ளார். 

ராகுல் காந்தி ஜி, மிஸ் இந்தியா போட்டியாளர்களை அரசு தேர்வு செய்யவில்லை. ஒலிம்பிக்கு விளையாட்டு வீரர்களையும் அரசு தேர்வு செய்வதில்லை. இதேபோல் திரைப்பட நடிகர், நடிகைகளையும் அரசு தேர்வு செய்வதில்லை. மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ்  உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான ஆட் சேர்ப்பில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீட்டை அரசு மாற்ற உச்சநீதிமன்றம் ஒருபோதும் அனுமதி அளிக்காது என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். 

ஆனால் பழங்குடியினத்தை சேர்ந்தவர் முதன் முறையாக குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையும், ஓபிசி பிரிவை சேர்ந்தவர் பிரதமராக இருப்பதையும், மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பதையும் ராகுல் காந்தி பார்க்க மாட்டார்'' என்று கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.