முஸ்லிம்களின் புனித பண்டிகையான ரமலான் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடைமைகளில் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். ரமலான் நோன்பு பிறை தெரிவதன் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எப்போது பிறை தெரிகிறதோ அதை வைத்தே நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பார்கள். அதிகாலையில் எழுந்து உணவுகளை உண்டு தொழுகை மேற்கொண்ட பின்பு நோன்பு கடைப்பிடிப்பார்கள். இதன் பின்னர் அந்த நாள் முழுவதும் உணவு, தண்ணீர் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் நோன்பு இருப்பார்கள். தொடர்ந்து, மாலை வேளையில் தொழுகையை முடித்துவிட்டு இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள்.
இவ்வாறு மாதத்தின் 30 நாட்களிலும் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும். 30-வது நாளில் வானில் பிறை தெரிந்த அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் சவுஹி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு தொடக்கத்தை குறிக்கும் வகையில் கடந்த 28-ஆம் தேதி பிறை தென்பட்டுள்ளது. இதையடுத்து ரமலான் புனித நோன்பு நேற்று (மார்ச் 1) முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (மார்ச் 1) பிறை தெரிந்ததை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 2) ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமை காஜி தாவுத் சைகர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஆசிர்வாதங்கள் நிறைந்த ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. ரமலான் நோன்பு நமக்கு அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டுவரட்டும். இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை பிரதிபலிக்கிறது. மேலும், இரக்கம், கருணை மற்றும் சேவையின் மதிப்புகளையும் நமக்கு நினைவூட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
As the blessed month of Ramzan begins, may it bring peace and harmony in our society. This sacred month epitomises reflection, gratitude and devotion, also reminding us of the values of compassion, kindness and service.
— Narendra Modi (@narendramodi) March 2, 2025
Ramzan Mubarak!