காஞ்சிபுரத்தில் அதிமுகவின் 53 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை வரவேற்கும் விதமாக செண்டை மேளம், நடனம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை செய்து வரவேற்றனர். அதன் பின்னர் பழனிச்சாமி விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் மாலை தூவி மரியாதை செய்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இப்பொழுது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குடும்ப ஆட்சியின் மூலம் மீண்டும் மன்னர் ஆட்சியை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். திமுக என்பது கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் குடும்ப உறுப்பினர்கள்தான் இயக்குனராக இருந்து வருகிறார்கள். அந்த உறுப்பினர்களான உதயநிதி, சபரீஷ்வரன், ஸ்டாலினுடைய மனைவி இவர்கள்தான் தமிழ்நாட்டை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள். தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளவில்லை, அவர் குடும்ப உறுப்பினர்கள்தான் ஆண்டு வருகிறார்கள். திமுகவிற்கும் ஜனநாயகத்திற்கும் வேறுபாடுகள் அதிகமாக உள்ளது. திமுகவில் ஜனநாயகத்தை பார்க்க முடியாது, பணம் நாயகத்தை மட்டுமே பார்க்க முடியும்.
ஒரு அமைச்சர் பதிவு செய்கிறார் உதயநிதி மட்டுமல்ல அவருடைய மகன் இன்பநதியையும் ஏற்றுக் கொள்வோம் என்று அடிமை சாசனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அதிமுக இதுபோன்று இல்லை சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராகலாம். ஸ்டாலின் தனது கூட்டணி வலுவாக இருக்கிறது என்று கூறுகிறார். ஆனால் இவருக்கு திமுக கட்சியின் மீது கவலை இல்லை, எவ்வித இடத்திலும் திமுக வலுவான கட்சி என்றும் மக்கள் செல்வாக்குள்ள கட்சி என்றும் கூறவில்லை. கூட்டணி வலுவாக உள்ளது என்றுதான் கூறிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் கூட்டணி வைத்துதான் கட்சியையும், ஆட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலுமே ஊழல் நிறைந்துள்ளது. ஊழல் இல்லாத துறையே இல்லை. ஆனால் ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சி நடத்துகின்ற மாநிலம் தமிழ்நாடு என்று கூறுகிறார். சிறப்பாக ஆட்சி நடக்கவில்லை, சிறப்பாக ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. ஊழல் நிறைந்த அரசாங்கம் என்று சொன்னால் இந்தியாவிலேயே திமுக தான். இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம், திமுக அரசாங்கம்தான். அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்க கூடிய கட்சி அதிமுக கட்சி. அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் 140 தேசிய விருதுகளை பெற்றோம்.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து இருக்கிறது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்வாதாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. அதனால் இரும்பு கரம் கொண்டு இந்த போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று கூறியும் இதுவரையிலும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. காவல்துறையை பயன்படுத்தி சுதந்திரமாக செயல்பட விட்டிருந்தால் போதை பொருளை தடுத்திருக்கலாம். காவல்துறையினரை ஏவல் துறையாக மாத்தி விட்டார்கள். திமுக ஆட்சியில் இது போன்ற அவல நிலை தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக பொருத்தவரைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி, திமுக பொறுத்தவரைக்கும் குடும்பத்திற்காக பாடுபடுகின்ற கட்சி. வருகின்ற 26 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு நல்ல கூட்டணி அமையும்” எனக் கூறினார்.