முதுகலை நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 11 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நுழைவு தேர்வுக்கான வினாத்தாள்கள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் தகவல் பரவியது.
PG NEET leaked materials எனும் பெயரில் டெலிகிராமில் தொடங்கப்பட்டுள்ள கணக்கில் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் 70 ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்பதாக தகவல்கள் பரவியது. இந்த தகவல் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீட் வினாத்தாள்கள் விலைக்கு கிடைப்பது போன்ற தகவல்கள் போலியாக பரப்பப்பட்டு வருவதாக தேர்வு வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை. Telegram சமூக வலைதள பக்கத்தில் வெளியான தகவல் தவறானது. தேர்வர்கள் யாரும் சமூக வலைதளத்தில் கூறியவற்றை நம்ப வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளது.
மேலும், Telegram சமூக வலைதள பக்கத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் இருப்பதாகவும் உரிய தொகையை செலுத்தி அதைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வந்த தகவல் தவறானது எனவும் தேர்வர்கள் இது போன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
தவிர, தேர்வர்களை ஏமாற்றும் நோக்கத்தில் டெலகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் இளநிலை நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் முன்கூட்டியே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான மாணவர்கள் 720க்கு 720 என முழுமையான மதிப்பெண்கள் பெற்றதும், ஒரே தேர்வு மையங்களை சேர்ந்த பலர் முதலிடம் பிடித்ததும் சந்தேகத்தை அதிகரித்தது.
இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராட்டங்கள் வெடித்தன. இதன்பிறகு நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்ட மத்திய அரசு, இது தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இந்த விசாரணையை தீவிரப்படுத்தி வரும் சிபிஐ, நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து பல்வேறு நபர்களை கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.