Manu Bhakers Team Send Legal Notice : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். அத்துடன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்தார்.
இந்நிலையில், 4வது நாளான நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான தகுதி சுற்றில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை களமிறங்கியது. இதில், 12 சுற்றுகள் முடிவில் தென் கொரிய இணையை 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் இந்திய சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு ஒரு ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார்.
இந்நிலையில், மனு பாக்கர் குழு சில விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிகை எடுக்க உள்ளதாக பிரபல விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு நிதியுதவி [sponsoring] செய்யாமல், மனு பாக்கரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்ததாக சில நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு பாக்கர் ஒலிம்பிக் பதக்கம் வென்றதற்கு பஜாஜ் உணவுப்பொருட்கள் [Bajaj Foods], கபீஃபிட் [KapeeFit], எல்.ஐ.சி., [LIC], ஃபிட்ஜீ [FIITJEE], பிஎஸ்சி இண்டீரியர்ஸ் [BSC Interiors], ஓக்வுட் சர்வதேசப் பள்ளி [Oakwood International School], மற்றும் கினெட்டோ [Kineto] போன்ற நிறுவனங்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (ASCI) இத்தகைய நிறுவனங்களின் செயல்பாடுகளை விமர்சித்து இருந்தது. 2020இல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது, விளையாட்டு வீரர்களின் அனுமதியின்றி வெற்றிகளை குறிப்பிடும் வகையில் விளம்பரப்படுத்துவது, விதிமுறைகளை மீறும் செயல் என்று தெரிவித்திருந்தது.