Actor Mohanlal visit Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 5வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவு நிவாரணத்திற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். அவரது மனைவி டி.கே.கமலா 33,000 ரூபாயை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார். இதனிடையே இந்திய டெரிடோரியல் ராணுவ லெப்டினன்ட் கர்னல் கவுரவப் பதவி வகிக்கும் நடிகர் மோகன்லால், மீட்புப் பணிகள் நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டார்.
வயநாட்டின் சூரல்மலை பகுதிக்கு ராணுவ உடையில் சென்ற மோகன்லால், அங்கு நடைபெறும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்த காட்சிகள் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரும் சோகங்களில் ஒன்று வயநாடு நிலச்சரிவு. மீட்புப் பணிகளை நேரில் சென்று பார்க்கும் போதுதான் இந்தத் துயரம் எவ்வளவு ஆழமானது என்பதை உணர முடிகிறது. மேலும் இந்த பேரிடரில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் எனது நன்றிகள் எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க - வயநாட்டில் கடவுள் ரூபத்தில் வந்த கஜமுருகன்!
முன்னதாக வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா மூவரும் இணைந்து 50 லட்சம் ரூபாய் வழங்கினர். அதேபோல், கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் சார்பில் 25 லட்சமும், சீயான் விக்ரம் 20 லட்சம் ரூபாயும் வழங்கினர். நடிகை ராஷ்மிகா மந்தனா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்தார். விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் ரூ. 20 லட்சம் வழங்கியுள்ளனர். மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, துல்கர் சல்மான், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலரும் கேரள முதலமைச்சர் நிவாரண நிதியாக லட்சங்களை வாரி வழங்கியுள்ளனர்.
கடந்த 30ம் தேதி சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைக்கிராமங்களின் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர். மாநில-தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் ராணுவத்தின் முப்படைகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தோண்டத் தோண்ட உடல்கள் கிடைத்த நிலையில், இதுவரை 344 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3500க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 130க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலச்சரிவின்போது மாயமானவர்களின் ஜிபிஎஸ் சிக்னல் வழியாக கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, அவர்களை மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து 4 மோப்ப நாய்கள் தேடுதல் பணியில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். விஷ்ணுசாந்தி அறக்கட்டளை சார்பில் ரூ.3 கோடி கேரள முதல்-அமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று என்று மோகன்லால் அறிவித்துள்ளார். மேலும் முண்டக்கையில் சேதம் அடைந்த பள்ளியை புதிதாக கட்டி தருவதாகவும் அவர் அறுதி அளித்துள்ளார்.
வயநாட்டில் மோகன்லால்..!#kumudam | #kumudamnews | #kumudamnews24x7 |#Mohanlal | #WayanadLandslide | #WayanadTragedy |#KeralaFlooding | #KeralaLandslides | #Wayanad | #mollywood | @Mohanlal | @MohanlalMFC pic.twitter.com/MqXZy67Dhq
— KumudamNews (@kumudamNews24x7) August 3, 2024