டெல்லி சட்டசபையில் 70 தொகுதிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி , பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. இதில், 60.39 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப். 8) நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக 19 மையங்கள் திறக்கப்பட்டன.
வாக்கு எண்ணும் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 5 ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதல் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் தாண்டி பாஜக முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்திய நிலவரத்தின் படி 70 தொகுதிகள் அடங்கிய டெல்லியில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்தமுறை ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 24 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த டெல்லியில் கடந்த பத்து ஆண்டுகளாக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் காங்கிரஸ் தவித்து வருகிறது. டெல்லி தேர்தலை பொறுத்தவரை காங்கிரசாரின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பிரசாரம் சிறுபான்மையினர் வாக்குகளை ஈர்க்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை அமைக்கும் நிலை உருவாகி உள்ளது. 1993-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது. 1988-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அவ்வாண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை ஷீலா தீக்ஷித் டெல்லியின் முதலமைச்சராக இருந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை வென்றது.
48 நாட்கள் ஆட்சி நடத்திய பிறகு தனது பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். ஆனால் 2015-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை வென்று கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சி அமைத்தார். அடுத்து நடைபெற்ற 2020-ஆம் ஆண்டில் 62 இடங்களைப் பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். இந்த நிலையில் தற்போது நடைபெறும் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.