இந்தியா

Actor Govinda : வீட்டில் தனியாக இருந்த பிரபல நடிகர்... திடீரென வெடித்த துப்பாக்கி... காலில் காயம் ஏற்பட்டது எப்படி?

Bollywood Actor Govinda Suffers Bulet Injury : பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது துப்பாக்கியால் தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Govinda : வீட்டில் தனியாக இருந்த பிரபல நடிகர்... திடீரென வெடித்த துப்பாக்கி... காலில் காயம் ஏற்பட்டது எப்படி?
கோவிந்தா மருத்துவமனையில் அனுமதி

Bollywood Actor Govinda Suffers Bulet Injury : 1986ம் ஆண்டு லவ் 86 திரைப்படம் மூலம் இந்தித் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கோவிந்தா. இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கோவிந்தா, தற்போது சிவசேனா கட்சியிலும் பொறுப்பு வகிக்கிறார். மும்பையின் ஜூஹூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் கோவிந்தா, தற்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மனைவி கொல்கத்தா சென்றிருந்ததால், மும்பையில் உள்ள வீட்டில் கோவிந்தா மட்டும் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. 

இன்று அதிகாலை நடிகர் கோவிந்தாவும் மும்பையில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா செல்ல திட்டமிட்டிருந்தார். காலை 6 மணிக்கு மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு விமானம் என்பதால், அதிகாலையிலேயே தனது வீட்டில் இருந்து புறப்படத் தயாராகியுள்ளார் கோவிந்தா. அப்போது அவர் தனது ரிவால்வர் துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருக்க, அது தவறுதலாக வெடித்துள்ளது. இதில் துப்பாக்கி குண்டு கோவிந்தாவின் காலில் பாய்ந்துள்ளது, இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இதனையடுத்து கோவிந்தாவின் வீடு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதோடு, உடனடியாக அவரது காலில் இருந்த குண்டும் அகற்றப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் கோவிந்தா நலமாக இருப்பதாக அவரது மேனேஜர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது கோவிந்தாவின் மகள் அவருடன் மருத்துவமனையில் இருப்பதாகவும், விரைவில் அவரது மனைவி கொல்கத்தாவில் இருந்து மும்பை திரும்புவதாகவும் கூறியுள்ளார். 

இதனிடையே தனது உடல்நலம் குறித்து நடிகர் கோவிந்தாவும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது துப்பாக்கி வெடித்ததில் கால் முட்டியில் குண்டு பாய்ந்தது. தற்போது அது நீக்கப்பட்டு நான் நலமாக இருப்பதகவும், மருத்துவர்களுக்கும் தான் நலமுடன் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். அதிகாலை 4.45 மணியளவில் கோவிந்தாவின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதுகுறித்து ஜூஹூ பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவிந்தாவின் உடல்நிலை சீராக இருப்பதால், விரைவில் அவர் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் பாலிவுட் ஸ்டார் கோவிந்தா துப்பாக்கி குண்டு காயமடைந்துள்ள சம்பவம் சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.